திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் தனியார் பள்ளி ஆன மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது இங்கு எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பள்ளியில் பெரும்பாலும் விஐபிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிந்ததை தொடர்ந்து 21ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்க இருந்த நிலையில் ஏழு மணிக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக நிர்வாகம் தரப்பில் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தால் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு இன்று பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. மேலும் பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பொன்னி வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் திருச்சியில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி என மொத்தம் 8 கல்வி நிறுவனங்களுக்கும், தமிழகத்தில் உள்ள மற்ற தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்பு இன்று பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவமானது பெற்றோர்கள் மத்தியிலும் மாணவ மாணவிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision