திருச்சியில் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நூலக வார விழா போட்டிகள்

திருச்சியில் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நூலக வார விழா போட்டிகள்

54வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் வருகிற 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி 14ஆம் தேதி காலை 11 மணிக்கு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேசிய தலைவர்கள் பற்றி ஓவியம் வரைதல் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வரவேண்டும்.

15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்திய விடுதலைப் போரில் என்னை கவர்ந்த நிகழ்வு எனும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறுகிறது. பேச்சுப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு 5 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும். 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறும். பேச்சுப் போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக வழங்கப்படும். இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியதாகும்.

17ஆம் தேதி 11:30 மணிக்கு பார்வைகுன்றியவர்களுக்கு பொது அறிவு தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறும். 18ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மகளிர்கான பேச்சுப்போட்டி இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் நடைபெறும். ஒருவருக்கு ஐந்து நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும். 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு வாசகர்களுக்கு படம் பார்த்து கதை, கவிதை, கட்டுரை எழுதும் போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் நேரத்தில் படம் பார்வைக்கு வைக்கப்படும். வயது வரம்பின்றி ஆண், பெண் இருபாலரும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு சுதந்திரப் போராட்ட வரலாறு பக்கங்களில் திருச்சி மாவட்டம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. இதை எழுதி மாவட்ட மைய நூலகம், 144 மேலாளர் சாலை, சிங்காரத்தோப்பு, திருச்சி 620008 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு தேசிய நூலக வார நிறைவு விழாவில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட மைய நூலக முதல்நிலை நகர் கண்ணம்மாள் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision