ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி கடந்த (11.12.2023)-ந் தேதி, அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆபீசர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை அடையாளம் தெரிந்த நபர்கள் வெட்டி கொலை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், வழக்கின் எதிரியான அரியமங்கலத்தை சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன், (32) த/பெ.தங்கவேல் என்பவருக்கும் மேற்படி இறந்துபோன நபருக்கும் தொழில் போட்டி இருந்து வந்ததாகவும், அவரது தூண்டிதலின் பேரில் 4 நபர்களை வைத்து கொலை செய்ததாகவும் தெரியவந்தது, மேற்படி வழக்கில் அப்பு (எ) ஹரி கிருஷ்ணன் மற்றும் 4 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் எதிரி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன் மீது அரியமங்கலம் காவல்நிலைய எல்லையில் ஆயுதத்தை காண்பித்து பணத்தை கொள்ளையடித்ததாக 7 வழக்குகளும், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக 2 வழக்குகளும், பொது சொத்தை சேதப்படுத்தியதாக ஒரு வழக்கும், புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஒரு வழக்கும், அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் கொலை முயற்சி செய்ததாக 2 வழக்குகளும், பொன்மலை காவல்நிலையத்தில் ஒரு வழக்கு உட்பட 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் எதிரி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாநகரில் இதுபோன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.