வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு - திருச்சியில் கடைகள் அடைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். நீண்ட நெடிய காலம் வணிகர்களின் நலனுக்காக போராடிய அவருக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரணமடைந்த வெள்ளையனின் உடல் சென்னை அமைந்த கரையில் உள்ள மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர் நலச்சங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க தலைவர் ராஜன் பிரேம்குமார் அழைப்பை ஏற்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முதல் ரங்கா ரங்கா கோபுரம் வரையிலான மளிகை, ஜவுளி, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் தாமாக முன்வந்து அடைத்தனர்.
அதேபோன்று ஸ்ரீரங்கம் பஸ் நிலைய பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேற்கண்ட பகுதிகளில் டீக்கடை ஓட்டல், மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீரங்கம் ராஜகோபுர அருகில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த கடையடைப்பு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் உடனடியாக பொருட்கள் வாங்க இயலாமல் தடுமாறினர். இன்று சங்க அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நாளை காலை சொந்த ஊரான திருச்செந்தூர் அருகில் உள்ள பிச்சி விலை கிராமத்தில் தென் மாநில நிர்வாகிகள், வணிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர் நலச்சங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க தலைவர் ராஜன் பிரேம்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, அமைப்புச் செயலாளர் ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் பொன். தமிழரசன், நிர்வாகிகள் பிச்சைமுத்து , செல்வமுருகன், மகேஸ்வரன், அம்மா மண்டபம் சேகர், திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர் சங்க செயலாளர் பால கங்காதரன்,
ஒருங் கிணைப்பாளர் கே.கே.நகர் செந்தில்குமார், அரியமங்கலம் செல்வின், கே.கே. நகர் சாய் ரமேஷ், நாகமங்கலம் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision