இரு தினங்களில் விதிமுறைகளை மீறிய 1000-க்கு மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.
இருப்பினும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு 10.05.2021 முதல் 24.05.2021 முதல் அமலில் உள்ளது. மேலும் 16.05.2021 மற்றும் 23.05.2021 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 17.05.2021-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் செல்ல அரசால் ‘இ-பதிவு’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் உத்தரவை மீறி முகக்கவசம் அணியாத 30,000 நபர்கள் மீதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 1500 நபர்கள் மீதும் நெறிமுறைகளை கடைப்பிடிக்காத 50 வணிக வளாகங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களில் விதிமுறைகளை மீறிய சுமார் 1000-க்கு மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பொருட்டு, திருச்சி மாநகர காவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK