தேசிய ஊட்டச்சத்து மாதம் - இலவச சித்த மற்றும் இயற்கை மருத்துவ முகாம்

தேசிய ஊட்டச்சத்து மாதம் - இலவச சித்த மற்றும் இயற்கை மருத்துவ முகாம்

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ( செப் 1-30) முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கிரியா அறக்கட்டளை மற்றும் பெல் பெண்கள் நல சங்கம் சார்பாக  “ஆரோக்கியமே செல்வம்’ என்ற தலைப்பில் இலவச சித்த மற்றும் இயற்கை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெறும்பூர் பெல் பால விஹார் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. பெல் பெண்கள் நல சங்க தலைவர் திருமதி ப்ரீத்தா தலைமை தாங்கினார். துணை தலைவர் மம்தா பாண்டா, பொருளாளர்  சோனியா பாண்டா,  உறுப்பினர்  சித்ரா தேவி முன்னிலை வகித்தனர். பெல் பெண்கள் நல சங்க செயலர்  சாந்தி ரவீந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்புரை ஆற்றிய திருச்சி கிரியா அறக்கட்டளை முனைவர் கே.சி.சிவபாலன் , 2019–21 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 3 கோடி குழந்தைகள் போதுமானஊட்டச்சத்து இல்லாமல் 
பாதிக்கப்பட்டுள்ளனர். 15 - 49 வயதிற்குட்பட்ட பெண்களில் 18 கோடி பேர் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய்கள் ஏற்பட்டு மருத்துவ செலவு அதிகரிக்கிறது. குடும்பத்தை சரி வர கவனிக்க முடியமால் போகிறது.

எனவே ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும்  சாப்பிட வேண்டும். ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவது பெற்றோரின்  கையில் உள்ளது என்றார்.நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் திருமதி லட்சுமி கீதா ‘அஞ்சறை பெட்டி வைத்தியம்’என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். திருச்சி ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா மையத்தின் மருத்துவர் கெளதம்  தினசரி செய்ய வேண்டிய  மூச்சு பயிற்சி மற்றும்  உடல்  பயிற்சி குறித்து செயல்விளக்கம் அளித்தார்.  

இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெல் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இலவச இயற்கை மருத்துவ ஆலோசனை பெற்று பயன் அடைந்தனர். பெண்கள் நல சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்மிரிதி நன்றிகூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO