சிறு வணிகர்களுக்கு 3 மாதத்துக்கு சந்தா கட்டணம் இல்லை திருச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி
வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், வணிக வரி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி, அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி தேசிய கல்லுாரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்... தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், மண்டலங்கள் வாரியாக, அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன் மற்றும் அதிகாரிகள், வணிகர்களிடம் கருத்துக்கள் கேட்டுள்ளனர். கடந்த காலங்களில் நடந்த தவறுகள், இப்போது நிகழக்கூடாது. வணிகர்கள் நேர்மையாக தொழில் செய்ய, உறுதுணையாக இருக்கும்.
அரசு அதிகாரிகள் மூலம் இன்னல்கள் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்கப்படும். தொழில் செய்யாமல், வணிக ரீதியாக போலியாக செயல்படுபவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறாக தொழில் செய்பவர்களை கண்டறிந்து, தடுக்கவும், ஜ.எஸ்.டி., வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் களையப்படும்.
பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு வரிசைப்படி பெயர் மற்றும் நேரத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டு, இடைத்தரகர் இல்லாமல் பதிவுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன் லைன் மூலம் பணம் செலுத்தும் முறையும் நடைமுறைப்படுத்தப்படும். ஒரு சில மாதங்களில், பத்திரப் பதிவுக்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை மாற்றப்படும். சிறு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தால், 3 மாதத்துக்கு சந்தா கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்களின் குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவகளுக்கு உதவவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, வணிகர்கள் நலவாரியம் அமைக்கப்பதற்கான அறிவிப்பை, விரைவில் முதல்வர் வெளியிடுவார்.
கடந்த ஆட்சியாளர்கள், 5 லட்சம் கோடி கடனில், அரசை விட்டுச் சென்றுள்ளனர். ஒன்றிய அரசு தரப்பில் சொல்வதிலும், செய்வதிலும் மாற்றம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில், ஒன்றிய அரசுதான் அதிகம் வரி வருவாய் ஈட்டுகிறது.
பத்திரப்பதிவில் முறைகேடு, அப்ரூவல் பெறாத நிலங்களை விற்பனை செய்வது தொடர்பான புகார் வந்தால், உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே, முறைகேடு செய்தவர்கள், இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில், ஆள்மாறாட்டம் செய்து, போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH