இராப்பத்து 10ம் திருநாள் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

இராப்பத்து 10ம் திருநாள் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம்  அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

பகல்பத்து திருநாள் கடந்த 1ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து ராப்பத்து விழா கடந்த 2ம் தேதி, விழாவின் முதல் நாளன்று பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைபெற்றது. (ராப்பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது).

இன்றையதினம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து விழாவின் 10ம் நாளான இன்று தீர்த்தவாரி வைபவமானது வெகுவிமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள் திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தடைந்தார். பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கியபடி சின்ன நம்பெருமாள் சந்திர புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

தீர்த்தவாரிக்கு பிறகு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பிறகு இன்று இரவு முழுவதும் திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நம்பெருமாள்,  நாளை காலை அதிகாலை நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து அதன்பிறகு  வைகுண்ட ஏகாதசி திருவிழா இனிதே முடிவடைகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn