50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஊர் பெயர் மாற்றம் - வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள எப்.கீழையூர் கிராமம். இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வூர் எப்.கீழையூர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
அரசு ஆவணங்களிலும் அவ்வாறே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் எப்.கீழையூர் என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றிவிட்டு புதிதாக அரியாக்கவுண்டம்பட்டி என பெயர் பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஊர் பெயரை மாற்றச் சொல்லி பொதுமக்கள் அளித்த மனுவின் படி பெயர்ப்பலகை மாற்றப்பட்டதாக தகவல் அளித்துள்ளனர்.
அதேபோல் அரசு ஆவணங்களிலும் எப்.கீழையூர் என்ற பெயர் அரியாக்கவுண்டம்பட்டி எனவே வந்துள்ளது. பள்ளி மாணவர்கள் சான்றிதழ்கள், ஆதார் கார்டு, நில ஆவணங்கள், பட்டா சிட்டா, வீட்டு வரி உள்ளிட்டவைகளிலும் எப்.கீழையூர் என இருக்கும் நிலையில் தற்போது ஊர் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை மாற்றும் போதும் பிரச்சினைகள் ஏற்படுதாவும் கூறப்படுகிறது. பொதுமக்களின் சம்மதமின்றி எவ்வாறு பெயர்மாற்றப்பட்டது என அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் கேட்டபோது பொதுமக்கள் பெயரில் பிரதீப் என்பவர் மனு அனுப்பியது தெரியவந்தது.
பொதுமக்கள் யாரும் ஊர் பெயரை மாற்றக் கூறி மனு அளிக்கவில்லை எனவும் தங்கள் ஊரின் பெயரை பழையபடியே எப். கீழையூர் என மாற்றம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் வட்டாட்சியர் செல்வத்திடம் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். மேலும் மணப்பாறை காவல் நிலையத்தில் எப்.கீழையூர் பொதுமக்கள் பெயரில் முறைகேடாக மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பிய பிரதீப் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவினையும் அளித்தனர். பொதுமக்கள் சம்மதம் இன்றி ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து கிராமப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision