கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா செங்கரையூர் கிராமம் இங்கு பெரம்பலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நான்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செங்கரையூர் கிராமத்திலிருந்து தண்ணீர் செல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐந்தாவதாக ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. இதனை அடுத்து செங்கரையூர் அரியூர் கல்விக்குடி அன்பில் கே.வி.பேட்டை, பூண்டி நாகாட்சி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என். துரைமுருகன் முன்னிலையில் இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து வந்த லால்குடி தாசில்தார் மற்றும் லால்குடி காவல் நிலைய ஆய்வாளர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஊர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து ஊர் பொதுமக்கள் தரப்பிலிருந்து கூறியதாவது..... இந்த செங்கரையூர் பகுதியில் ஏற்கனவே நான்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் பெரம்பலூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

இதனை அடுத்து 20 ஆண்டுகளாக மணல் எடுத்து இந்த பகுதியில் நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாசன நீர் மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக இந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தும்படி நான்கு கிராம மக்கள் சார்பாக வலியுறுத்தினார்.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் லால்குடி தாசில்தார் மற்றும் லால்குடி காவல் ஆய்வாளர் விரைவில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு சுமூகமான மற்றும் நிரந்தர தீர்வு காணப்படும் அதுவரை ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறி கலைந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision