அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், சடாரி கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கும்படி ஸ்ரீராமாநுஜ தரிசன சபையினர் மனு

அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், சடாரி கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கும்படி ஸ்ரீராமாநுஜ தரிசன சபையினர் மனு

ஸ்ரீராமாநுஜ தரிசன சபையினர் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில்.. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ திருக்கோவில்களிலும் வைணவ அடியார்களுக்கும், பொதுமக்களான பக்தர்களுக்கும் தீர்த்தம், சடாரி பிரசாதங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

வைணவ 108 திவ்ய தேச கோவில்களில் முதன்மையானதாக, ஆணிவேராக விளங்குவது ஸ்ரீரங்க திவ்ய தேசமாகும். அப்பேற்பட்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தீர்த்தம், சடாரி நிறுத்தி வைத்திருப்பது சாஸ்திர சம்பிரதாயங்கள், ஸ்ரீராமாநுஜர் ஏற்படுத்திய வைணவ நெறிமுறைகள், நீண்டகால பழக்கவழக்கங்களுக்கு விரோதமாக உள்ளது.

இச்செயல் உலகெங்கிலும் உள்ள வைணவ அடியார்களுக்கும், ஆத்திக பக்தர்களுக்கும் மிகவும் வேதனையளிக்க கூடியதாக உள்ளது. வைணவ திருக்கோவில்களில் திருவாராதனம் (பூஜைகள்) முடிந்து தீர்த்தத்தை முதலில் அர்ச்சகர்களும், மற்ற கைங்கர்யகாரர்களும் எடுத்து கொண்டால் மட்டுமே அந்த திருவாராதனங்கள் பூர்த்தியாகுமென ஆகம விதிகள் கூறுகின்றன. இதுவே ஸ்ரீராமாநுஜர் ஏற்படுத்திய சம்பிராதய 
வழிமுறையாகும். இந்த வழிமுறைகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குட்பட்ட 
அனைத்து சன்னதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சாஸ்திர
சம்பிரதாயங்களுக்கு விரோதமான செயலாக உள்ளது.

இச்செயலானது பெரிய பெருமாளுக்கும், பெரிய பிராட்டிக்கும், ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும், உகப்பில்லாத மிக மோசமான செயலாக இதை நாங்கள் கருதுகிறோம். இவ்வேதனைச் செயலை உடனடியாக சரிசெய்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், அதன் நிர்வாகத்திற்குட்பட்ட மற்ற கோவில்களிலும் ஸ்ரீராமநுஜர் 
ஏற்படுத்திய நெறிமுறைகளை காத்து அனைவருக்கும் தீர்த்தம், சடாரி பிராசாதங்கள் கிடைக்கும்படி தாங்கள் ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr