தண்டால் எடு - தடுப்பு கட்டையில் டூவீலர் ஓட்டு - அநியாய அலப்பறை
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், அமைப்புகள் சேர்ந்த ஏராளமானோர் இப்பகுதியில் வந்து பேரரசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக வந்து மாலை அணிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் பாலத்தில் சில இளைஞர்கள் சாலையின் நடுவே போக்குவரத்துகளை நிறுத்தி கொடிகளை அசைத்து பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதன் ஒரு படி மேலாக சாலை நடுவே இருக்க கூடிய தடுப்பு சுவற்றின் மீது இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். ஆபத்தை உணராமல் இப்படி வித்தைகள் செய்து கொண்டாடுவது வாகன ஓட்டிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.
இது மட்டுமில்லாமல் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மாணவர் சாலையில் திருச்சியில் இருந்து கரூர் செல்லக்கூடிய குளிர்சாதன அரசு பேருந்து நிறுத்தி அதன் மீது ஏறி கூச்சலிட்டனர். மேலும் பேருந்து முன்பு ஒரு வாலிபர் தண்டால் எடுத்து பல வித்தைகள் செய்து காட்டினார். பொது போக்குவரத்தை மறித்து இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியானதா? கொண்டாட்டம் என்ற பெயரில் வரம்புகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக அநாகரிகமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்று அல்ட்ரா சிட்டி செய்யும் இளைஞர்களால் அந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அவ பெயர் ஏற்படும் சூழல் உருவாகிறது. இது போன்ற சம்பவம் நிகழா வண்ணம் இருக்க பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision