திருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து - ஆட்சியர் தகவல்

திருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து - ஆட்சியர் தகவல்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் 17.01.2021 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கவிருக்கிறது.

Advertisement

திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும், திருச்சி மாநகராட்சியில் 247 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும், மொத்தம் 1569 மையங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 17.01.2021 அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

Advertisement

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர் நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

 

ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் 17.01.2021 அன்று ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

17.01.2021 அன்று கிராமப்புறங்களில் 167641 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 94716 குழந்தைகளுக்கும், ஆக மொத்தம்; 262222 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 420 பேர்களுக்கும் 17.01.2021 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆக மொத்தம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 262642 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், வருகிற 17.01.2021 அன்று நடைபெறும் முகாமில் கட்டாயம் சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயிலிருந்து முழு பாதுகாப்பை அளிக்கும். எனவே தாய்மார்கள் அனைவரும் தங்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்கு அழைத்துச்சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.