தினசரி தமிழ் நாளிதழ்களில் நடிகைகளின் ஆபாச படங்கள் - நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி ஆட்சியர் அலுவலக வாசலில் ஆர்பாட்டம்
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடுகளிலிருந்தபடியே மாணவ, மாணவியர்கள் கல்வி கற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மாணாக்கர்கள் தங்களது அறிவைப் பெருக்கிக்கொள்ள அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு தினசரி தமிழ் பத்திரிக்கைளில் பள்ளி மாணாக்கர்களை சீரழிக்கும் வகையில் நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி இன்று சமூக ஆர்வலர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆபாச பத்திரிக்கை, வார புத்தகங்களுடன் வந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
மேலும் மக்களுக்கான பிரச்சனைகளை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கைகளில் பிரபலமான ஒருசில பத்திரிக்கை ஆபாசபடங்களை போட்டி, போட்டுக்கொண்டு வெளியிடுவதால் பதில் சொல்ல முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பதாகவும், ஆபாச இணையதளங்களை பார்ப்பதை தடுக்க போலீசாரிடம் வலியுறுத்தும் பட்சத்தில் வெளிநாடுகளில் சர்வர் இருப்பதாக கூறும் போலீசார், உள்ளுரில் செயல்படும் பத்திரிக்கை நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு தொடர்ந்து வெளியிடும் பட்சத்தில் மாணவர்கள் படிக்க தகுதியற்றது எனக்கூறி ஏ-சான்றிதழ் வழங்க வேண்டும் இல்லையெனில் இதனை தடைசெய்யவும், இதுபோன்ற படங்களை வெளியிடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu