பொதுமக்கள் எதிர்ப்பு - திரும்பிச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள்.

பொதுமக்கள் எதிர்ப்பு - திரும்பிச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, பிராம்பட்டி வடக்கு பகுதியில் உள்ள சர்வே எண்.83, 84 மற்றும் 152-ல் உள்ள தவறான பதிவை ரத்து செய்து வருவாய்த்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கும்மாறு கூறி அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மருங்காபுரி தாலுகா‌ மினிக்கியூரில் உள்ள தனக்கும், நிலமற்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும் கோரியிருந்தார். இது குறித்து உத்தரவிட்ட நீதிமன்றம் நான்கு மாத காலத்திற்குள் தகுதி மற்றும் சட்டத்தின்படி இறுதி உத்தரவை அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மருங்காபுரி வட்டாட்சியர் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பிரதிவாதிகளில் ஒருவரான நாச்சம்மாள் என்பவர் புல எண் 452/ 5 ல் 0.2600 சதுர மீட்டர் நிலம் கிராம நத்தம் கணக்கில் தீர்வை விதிக்கப்பட்டு பட்டா எண் குறிப்பிடப்படாமல் உள்ளது. மேலும் அதில் ஒரு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு கிராமத்தின் கடைசி பட்டா எண்ணுக்கு அடுத்த பட்டா என்னான 229 ஐ பட்டா எண்ணாக வழங்கிட கோரியிருந்ததன் பேரில் கிராம கணக்கில் திருத்தம் மேற்கொண்டு பட்டா வழங்க வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட இடத்தை அளப்பதற்காக வருவாய் துறை அதிகாரிகள் நில அளவையர் உள்ளிட்டோர் வளநாடு போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனம் மூலம் இடத்தை சுத்தம் செய்து அளவிடும் செய்யும் பணிக்காக சென்றனர். அப்போது மினிக்கியூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டா வழங்கியது தவறு எனவும், நிலமற்ற தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி ஜேசிபி வாகனத்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் தனிப்பட்ட நபருக்கு பட்டா வழங்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும், நிலமற்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு உதவி செய்யாமல் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். நிலமற்றவர்களுக்கு தமிழக அரசு வீட்டுமனைப்பட்டா வழங்க கூறியிருந்தாலும் அதிகாரிகள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வதில்லை என புகார் கூறினர். 

அப்பகுதி பொதுமக்கள் நில அளவீடு செய்ய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றனர். ஜேசிபி வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சினையில் தலையிட்டு ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision