ராமஜெயத்திற்கு இன்று பிறந்தநாள் - கொலை வழக்கு என்னாச்சு?

Sep 22, 2023 - 10:11
Sep 22, 2023 - 10:15
 650
ராமஜெயத்திற்கு இன்று பிறந்தநாள் - கொலை வழக்கு  என்னாச்சு?

திமுக முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு நடைப்பயிற்சி மேற்கொண்ட பொழுது கொலை செய்யப்பட்டார் அவரது உடல் திருவளர்சோலை அருகே கண்டெடுக்கப்பட்டது. அந்த வழக்கு உள்ளூர் காவலர்கள் முதல் உலக காவலர்கள் வரை பரபரப்பாக பேசப்பட்டு தற்பொழுது வழக்கு தொடர்பாக விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். அது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

மோகன்ராம், தினேஷ் ,நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன் ஆகியோரும் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி தான் மனு தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த வழக்கை கடந்த நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை 7ம் தேதி அன்று விசாரிக்கப்பட்டது. அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து அந்த வழக்கை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். 

அதனையடுத்து அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது, அதில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். இதில் தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமாக நடந்து வரும் இவ்வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision