சபரிமலை சன்னிதானம் இன்று திறப்பு - முகாம்கள் ரெடி வனப்பாதைகள் சீரமைப்பு

சபரிமலை சன்னிதானம் இன்று திறப்பு - முகாம்கள் ரெடி வனப்பாதைகள் சீரமைப்பு

மண்டலகால பூஜைக்காக சபரிமலை சன்னிதானம் இன்று (16ம் தேதி) 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் தொடங்கி 2 மாதங்களுக்கு சபரிமலை சன்னிதானம், சரணகோஷங்கள் முழங்கவுள்ளது. சன்னிதானம் மற்றும் மாளிகப்புறம் மேல்சாந்திகள் இன்று பொறுப்பேற்கின்றனர். இவர்களே மண்டல பூஜைக்காக நடையை திறக்கின்றனர். வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டலபூஜை நடக்கிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் கோயிலில் நிலவும் நெரிசல் தொடர்பாக நிலக்கல், பம்பா, சன்னிதானத்தில் பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும் நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எருமேலி, செங்கன்னுார், குமுளி, ஏற்றுமானூர், புனலுார் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கான தங்கும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பம்பாவுக்கு இப்போது 473 கேரளா அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிசம்பருக்கு பிறகு இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பா முதல் சன்னிதானம் வரை 15 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எருமேலி முதல் பம்பா வரையிலான வனப்பாதை, இந்த முறை முன்னதாகவே தயார் செய்யப்பட்டுள்ளதாக தேவஸம் போர்ட் அறிவித்துள்ளது.

கன்னி சாமிகளின் கனிவான கவனத்திற்கு :

வேடிக்கையாக செல்ல சபரிமலை சுற்றுலா தளம் அல்ல. 48 நாட்கள் கடும் பிரம்மச்சரிய விரதத்துடன் சபரிமலை சென்று ஐய்யப்பனை தரிசித்து அருளை பெறுவோம். அதிகாலையிலும் மாலையிலும்,குளிர்ந்த நீரால் நீராடவேண்டும். காலை மாலை இரு பொழுதிலும் விபூதி குங்குமம் சந்தனம் பூசி பூஜைகள் செய்து சரண கோஷம் முழங்க வேண்டும். விரத காலத்தில் கருப்பு,நீலம், காவி நிற ஆடைகளையே அணிய வேண்டும். மற்ற ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

பகலில் தூங்கக் கூடாது இரவில் துண்டு அல்லது பாய் விரித்து தரையில் தூங்குவது நலம் பயக்கும். சைவ உணவே உண்ண வேண்டும். இக்காலங்களில் ஒரே ஒரு வேளை உணவு உண்ணுவது நலம் இரவில் பழம், பால், பிரசாதங்கள் உண்ணலாம். நடைவழிபாதையில் காலணிகள், லுங்கி, ஷார்ட்ஸ் போன்றவற்றை அணியாமல் ஆகம முறைப்படி வேஷ்டி அல்லது துண்டு அணிந்து செல்லவும்.

பிளாஸ்டிக்,குப்பைகள்,மாலை,துணிகள் இவைகளை ஆங்காங்கே போடாமல் சபரிமலையின் தூய்மையை காப்பது நம் கடமை. மாலை அணிந்து புகைபிடிப்பது,போதை பொருட்கள் உபயோகிப்பது பாவச்செயலாகும். குருமார்கள் மற்றும் பெரியவர்களின் சொல் கேட்டு நடந்து ஐய்யனின் அருளைப் பெறுவோம். ஐயப்பனின் விரத முறைகளையும்,சபரிமலையின் புனிதத்தையும் காப்போம்.

குறிப்பாக பம்பாவில் நீராடிய பின்னர் நாம் அணிந்திருந்த உடைகளை அங்கேயே விட வேண்டும் என எங்கும் சொல்லப்படவில்லை ஆகவே அவற்றை ஆற்றில்விட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஐயனை வழிபட்டு அருளைப்பெற்று திரும்ப வேண்டுகிறோம்.

ஓம் சாமியே சரணம் ஐயப்பா !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision