சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் தொடக்கம்

சக்தி வழிபாட்டு தலங்களில் ஒன்றாகவும், திருச்சியின் அடையாளமாக இருக்கக் கூடியது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் திருவிழா, பூச்சொரிதல் விழா மற்றும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், இந்தாண்டு தைப்பூச திருவிழா வருகிற 16ம் தேதி காலை 07:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு உற்சவர் அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீயுலா நடைபெறுகிறது. இதையடுத்து, 17 முதல் 22ம் தேதி வரை, காலை மற்றும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீயுலா மற்றும் 23ம் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீயுலா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மஹாதீபாராதனை நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து 24ம் தேதி இரவு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. 25ம் தேதி காலை தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக காவிரி ஆற்றுக்கு சென்றடைகிறார். அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

பின்னர் 26ம் தேதி இரவு 01:00 முதல் 02:00 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர், காவிரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு ஆஸ்தான மண்டபம் சேர்த்தல், அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடிமரம் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உட்பட கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision