கைப்பேசி இணைப்புகளைத் துண்டிப்பதாக மோசடி அழைப்புகள்
இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தில் (ட்ராய்) இருந்து பேசுவதாகக் கூறி, கைப்பேசி எண் இணைப்புகளைத் துண்டிப்பதாக பொதுமக்களுக்கு வரும் அழைப்புகள் மோசடியானவை என்று ட்ராய் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களை சில நிறுவனங்கள், முகமைகள், தனிநபா்கள் தொடா்புகொண்டு ட்ராயில் இருந்து பேசுவதாகக் கூறுகின்றனா்.
பின்னா் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்கள் அல்லது பொதுமக்கள் தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்புவதாகக் கூறி, அவா்களின் கைப்பேசி எண் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனா்.இவ்வாறு மிரட்டும் நிறுவனங்கள், முகமைகள் அல்லது தனிநபா்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களின் ஆதாா் எண்கள் பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனா். கைப்பேசி எண்கள் துண்டிக்கப்படுவதைத் தவிா்க்க +917738177236 என்ற எண்ணில் ஸ்கைப் காணொலி அழைப்பில் பேசுமாறு அழைப்பு விடுக்கின்றனா்.
இந்த அழைப்புகள் குறித்து ட்ராயின் கவனத்துக்கு வந்துள்ளது. எந்தவொரு தனிநபா் மற்றும் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் கைப்பேசி எண்ணை ட்ராய் முடக்கவோ, துண்டிக்கவோ செய்யாது. கைப்பேசி எண் இணைப்பை துண்டிப்பதாக ட்ராய் எந்தவொரு தகவலையும் அனுப்பவோ, அழைக்கவோ செய்யாது.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்தவொரு முகமைக்கும் ட்ராய் அதிகாரம் அளிக்கவில்லை. இத்தகைய அழைப்புகள் சட்டவிரோதமானவை. எனவே ட்ராயில் இருந்து பேசுவதாக வரும் இதுபோன்ற அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் மோசடியானவை என்று பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற அழைப்புகளால் பாதிக்கப்பட்டவா்கள், தங்களுக்குத் தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனம், வலைதளம், அல்லது இணையவழி குற்றத் தடுப்பு உதவி எண் 1930-ஐ தொடா்புகொண்டு புகாரைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision