கொரோனா தடுப்பூசி முகாமில் கூச்சல், குழப்பம், கடும் வாக்குவாதம் - போலீசார் குவிப்பு 

கொரோனா தடுப்பூசி முகாமில் கூச்சல், குழப்பம், கடும் வாக்குவாதம் - போலீசார் குவிப்பு 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல்படி மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி கையிலிருப்பு இல்லாததால் முகாம்கள் நடத்தப்படவில்லை. இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என நேற்று அறிவிப்பு வெளியானது. இதில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, அரியமங்கலம் எஸ்ஐடி தொழில்நுட்பக் கல்லூரி, கே.கே.நகர் ஆர்ச்சர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி, கலையரங்கம் திருமண மண்டபம், டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி  ஆகிய 6 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 750 கோவாக்சீன் தடுப்பூசிகள் மட்டும் உள்ளது என அறிவிப்பு வெளியான நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு கூடினர். ஆனால் 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் என சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்ததால் அங்கு வந்திருந்த பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் நெருக்கமாக நின்றதால் காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர். இதற்கிடையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் முண்டியடித்து சென்றதால் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அவர்களை எச்சரித்து வரிசையில் நின்று தடுப்புசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனையெடுத்து தடுப்பூசி முகாமிற்கு காத்திருக்கும் பொதுமக்களை தவிர தொடர்ந்து வரும் பொது மக்களை யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த கூச்சல் குழப்பத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0