கல்வியாளர்கள் பங்கேற்ற சொல்லரங்கம் நிகழ்ச்சி
கலைஞர் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர வர்த்தக அணி சார்பாக கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கம் நிகழ்ச்சி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலாஜி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் செந்தமிழ் செல்வன், மாநகர அமைப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் மாவட்ட அணித்தலைவர், துணை அமைப்பாளர்கள், மாநகர அணி துணைத்தலைவர், துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த சொல்லரங்கம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், விஞ்ஞானியும், டெக்னிக்கல் அட்வைசருமான டாக்டர் பொன்ராஜ், மாநகர கழக செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்… கலைஞரின் நுற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் ஓராண்டில் 100 நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற முனைப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நம்முடைய முத்தமிழ் அறிஞருக்கு இந்த 100 நிகழ்ச்சிகள் மட்டுமல்ல இன்னும் பலநூறு நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அவருடைய பணியையும், உழைப்பையும் முழுமையாக எடுத்துக்கூற முடியாது.
1980க்கு பிறகு திமுக ஆட்சி அமைந்த சமயத்தில் அன்று தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய உணவு பண்டங்களின் அளவீட்டை பாதிக்கு பாதி குறைத்து விட்டது. இது தொடர்பாக பலக்கடிதங்கள் எழுதியும், எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அந்த சமயத்தில் தமிழகத்தில் மனித சங்கிலி போராட்டத்தை அன்று முதல்வராக இருந்த கலைஞர் அறிவித்தார். அந்த அறிவிப்பை கேட்டு மத்திய அமைச்சர் அவரை நேரில் வந்து சந்தித்து ஓரிரு மாதங்களில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதுக்குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நாங்கள் கேட்ட அளவை கொடுக்காமல் குறைத்து கொடுப்பதாக கூறியதால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து அந்த மனிதசங்கிலி போராட்டத்தை நடத்தினார். அன்றும் ஒன்றிய அரசை கலைஞர் எதிர்த்தார்.
இன்றும் நம்முடைய முதல்வர் ஒன்றிய அரசை எதற்கும் அஞ்சாமல் எதிர்க்கிறார். எனவே நாம் அவருடைய கரத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும், வருகின்ற தோ்தலில் அவருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்ற கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.