தமிழ்நாட்டில் முதன் முறையாக திருச்சியில் அதிநவீன போக்குவரத்து காவல் மையங்கள்

தமிழ்நாட்டில் முதன் முறையாக திருச்சியில் அதிநவீன போக்குவரத்து காவல் மையங்கள்

தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சியில் 21 முக்கிய சாலை சந்திப்புகளில் கழிப்பறை, குளிர்சாதன அறை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் அதிநவீன போக்குவரத்து காவல் மையங்கள் (மாடர்ன் டிராபிக் பூத்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சியில் முக்கிய சாலை சந்திப்புகளில் பணிபுரியும் போக்கு வரத்து காவலர்கள் இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும். மழையின்போது ஒதுங்கவும் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதையறிந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அறைகளுடன் கூடிய போக்குவரத்து மையங்களை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டார்.

இதுதொடர்பாக மாநகர காவல் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தியபோது, அந்தமையத்தில் கழிப்பறை மட்டுமின்றி கண்காணிப்பு கோபுரம், ஏன்என்பிஆர் கேமராக்களையும் செய்து கொடுக்கும்படி காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காரைக்குடியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் ஒப்புக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, மாநகரில் சஞ்சிவி நகர், திருவானைக்காவல், ஒத்தக்கடை, கேடி சிக்னல், புத்தூர் நான்குசாலை, பால்பண்ணை, நாச்சியார் கோயில் சந்திப்பு, ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், யாத்ரீ நிவாஸ், குமரன்நகர், நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை, தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு, ரயில்வே ஜங்ஷன், ஏர்போர்ட் வயர் லெஸ் சாலை, அரிஸ்டோ ரவுண்டான, மரக்கடை எம்ஜி.ஆர் சிலை ஆகிய 21 இடங்களில் அதிநவீன போக்குவரத்து காவல் மையங்கள் (மாடர்ன் டிராபிக் பூத்) அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், முதற்கட்டமாக காந்தி மார்க்கெட் சாலை சந்திப்பில் அதிநவீன போக்குவரத்து காவல் மையம் தொடங்கியுள்ளன. அங்கு 20 அடி உயரத்தில் இரும்பு தூண்களைக் கொண்டு கட்டுமானம் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தரைப்பகுதியிலிருந்து 8 அடி உயரத்தில் கழிப்பறை, அதற்குமேல் 4 அடி உயரத்துக்கு குடிநீர் தொட்டி, அதற்கு மேல் 8 அடி உயரத்துக்கு உள்ளே இருந்தபடியே சாலையை கண்காணிக்கும் வகையில் 4 புறங்களிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை வளைவு படிகட்டுகளுடன் கட்டப்படவுள்ளது.

இதுகுறித்து கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த மாடர்ன் டிராபிக் பூத் கட்ட மைப்பு தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக திருச்சியில் தான் அமைக்கப்படுகிறது. இந்த 21 சிக்னல்களிலும் கேமராக்கள் மற்றும் ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு, பதிவாகும் காட்சிகளை பார்வையிடும் வகையில் இம்மையத்துக்குள் பிரம்மாண்ட திரை வசதி செய்து தரப்பட உள்ளது. உள்ளே இருந்த படியே,பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான அதிநவீன வசதிகள் கொண்ட பொது அறிவிப்பு கருவிகளும் பொருத்தப்படுகின்றன.

இதுதவிர ரிமோட் மூலம் இயங்கும் வகையிலான சிக்னல்களும் அமைக்கப்பட உள்ளன, இம்மையத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரியமின்சக்தி மூலம் உற்பத்தி செய்து கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இதன் மேற்பரப்பில் ஏற்படுத்தப்படும் இந்த மையங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக காந்தி மார்க்கெட்டில் பணிகளை முடித்து, மே முதல் வார்த்தில் திறக்க திட்டமிட்டுள்ளது. அதன்பின் காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகளுட இணைந்து இதிலுள்ள நிறை, குறைகளை ஆய்வு செய்த பின்னர், அதற்கேற்ற மாறுதல்களுடன் மீதமுள்ள இடங்களில் கட்டுமான பணிகள் தொடங்கும்.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது சாலைகளில் இயக்கப்படும் பதிவு செய்யப்படாத வாகனங்கள், குற்றச் செயல்களில் தொடர்புடைய வாகனங்கள், சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn