"பெண்கள் தன்னைத்தானே தினமும் சுயசோதனை செய்து கொண்டால் வெற்றி நிச்சயம்" - டிஐஜி ஆனி விஜயா!
திருச்சிராப்பள்ளி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள திருச்சி வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவினை திருச்சி சரக டிஐஜி Z. ஆனி விஜயா துவக்கி வைத்தார்.
Advertisement
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் கூறுகையில்..."ஒரு சமுதாயத்தில் எப்போது பெண்கள் தன்னம்பிக்கையோடு, எழுச்சி பெற்று சுயமாக முடிவெடுக்கும் தேர்ச்சி பெறுகிறார்களோ அப்போது அந்த சமுதாயமே முன்னேற்றமடையும், மேம்பாடு பெறும். பெண்கள் முன்னேற்றுவதற்கு முந்தைய காலக் கட்டங்களில் கூட்டுக்குடும்பமுறை இருந்ததால் பெண்களை வழிநடத்த, ஒத்துழைப்பு கொடுக்க, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க குடும்பத்தில் பெரியோர்கள் இருந்தனர். ஆனால், இன்றைய அவசரகால சூழலில் பெண்கள் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு மூன்று விஷயங்கள் முக்கியமானவை, ஒன்று இலக்கை நிர்ணயித்தல், மற்றொன்று திட்டமிடல் பின் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளுதல்.
மேலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் தன்னைத்தானே சுயசோதனை செய்ய வேண்டும். இன்று நான் எவ்வளவு தூரம் என் இலக்கை நோக்கிப் பயணித்தேன் அதில் வந்த சவால்கள் என்னென்ன அந்த சவால்களை சமாளித்து வெற்றிபெற்றேனா? இல்லை வெற்றிபெற முடியாமல் அதிலிருந்து என்னென்ன பாடங்களை கற்றுக்கொண்டேன் என்று தினமும் தன்னை சுய சோதனை செய்து வந்தால் பெண்கள் வெற்றி பெறுவது நிச்சயம். முந்தைய காலகட்டங்களை விட இப்போது பெண்கள் பலதுறைகளில் பங்கெடுத்து முன்னேறி வருகிறார்கள். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இருப்பினும் தொழில் முனைவோரைப் பொறுத்த வரையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இன்னும் சாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
Advertisement
ஏனென்றால் தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு என்னவென்றால் சவால்களை எதிர் கொள்ளும் திறன் (Risk Taking). இதை பெண்கள் உணர்ந்துக் கொண்டால் பெண்களும் ஆண்களுக்கு நிகராக இந்த தொழில் முனைவோர் திறனில் சாதிக்க முடியும் என்பது உறுதி மிக சரியான தருணத்தில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரியின் வேளாண் வணிக மேம்பாட்டு மையம் இந்த பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவினை அமைந்திருக்கிறது. என்றார்