கம்பிகளுக்குள் கரும்புகள் - திருச்சி சிறையில் தித்திக்கும் கரும்புடன் தயாராகிவரும் பொங்கல் திருநாள்!
பல்வேறு காரணங்களாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தவறு செய்து திருந்துவதற்கான இடமாக இருப்பதுதான் சிறைச்சாலை. இத்தகைய சிறைச்சாலை என்பது சிறைக்கைதிகளுக்கு மேலும் மன அழுத்தத்தை தந்து விட கூடாது என்ற வகையில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறை தோட்டம் அமைக்கப்பட்டு காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், வெங்காயம், வாழை, கரும்பு, புதிய முயற்சியாக நெல் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை சிறை கைதிகளை கொண்டு இந்த சிறை தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
https://play.google.com/store/apps/details?id=com.india.thefoodiee
Advertisement
அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகள் அறுவடைக்கு தயாராகி உள்ளது சிறைக்கைதிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைத் தோட்டத்தில், 20 சிறைக்கைதிகளை கொண்டு கடந்த மார்ச் மாதம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது. முழுவதும் இயற்கை விவசாய முறையில் ரசாயன உரங்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த கரும்புகள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராகி உள்ளன.
ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. முற்றிலும் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட இந்த கரும்புகள் நன்கு உயரமாகவும், சாறு நிறைந்த கருப்பாகவும் வளர்ந்து நிற்கின்றன.
தற்போது இந்த கரும்புகளை அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இருபது கைதிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரும்புகளை அறுவடை செய்து அவற்றை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறை அங்காடியில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.சிறைக்கைதிகளின் வாழ்க்கையில் பல கண்ணீர் கதைகளும், மீள முடியா துயரங்களும் இருக்கும் சூழலில் அவர்களின் மனநிலையையும், வாழ்வியல் நிலையையும் மாற்றும் வகையில் அமைந்துள்ளது இத்தகைய தோட்ட பணி.
Advertisement
கடந்த 9 மாதங்களாக தாங்கள் பயிரிட்டு நட்டு வந்த கரும்புகள் தற்போது செழிப்புடன் வளர்ந்து இருப்பதை கண்டு மகிழும் இந்த சிறைக்கைதிகள், மகிழ்ச்சியுடன் அதனை அறுவடை செய்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கூறுகையில்..."சிறைக் கைதிகளால் நடப்பட்டுள்ள கரும்புகள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளதாகவும், வெளியிடங்களில் விற்ப்பதை காட்டிலும் சிறை அங்காடியில் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும், மக்கள் இதனை வாங்கி பயன் பெறலாம் என்றும் மொத்த வியாபாரிகளும் வாங்கி விற்பனை செய்து கொள்ளலாம் என்றும், இதன் மூலம் வரும் வருமானத்தில் சிறைக்கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படும் என்றார். மேலும் கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் வரை கரும்பு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளதால் 4 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்" என நம்புவதாக தெரிவித்தார்.
சிறை அங்காடியில் வைக்கப்பட்டுள்ள கரும்புகளை பொது மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வெளியிடங்களில் ஒரு கட்டு (பத்து கரும்புகள் அடங்கிய தொகுப்பு) 300 ரூபாய்க்கு வரை விற்கப்படும் நிலையில் சிறை அங்காடியில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கரும்பு ஒரு கட்டு 200 ரூபாய்க்கு மட்டுமே விற்கப் படுகிறது.
Advertisement
2 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் தொடர்ந்து அறுவடை செய்யப்பட்டு சிறை அங்காடியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும்,இதுமட்டுமன்றி சிறை தோட்டத்தில் தானியம் பழங்கள் காய்கறிகள் முந்திரி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் சிறைத்துறை அங்காடி கண்காணிப்பாளர் திருமுருகன்.இயற்கை முறை கரும்பு செழிப்பாக இருப்பதாகவும், மற்ற இடங்களைக் காட்டிலும் விலை குறைவாக உள்ளதாகவும் எனவே வாங்கி செல்வதாக கூறுகின்றார் முனுசாமி. இவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு கசப்புகளை கொண்டிருந்தாலும், இவர்கள் நட்ட கரும்பும் இனிக்க தான் செய்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a