அரசியல் ரீதியான பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்து சுவாமி நித்தியானந்தா வெளியேறுவார்- திருச்சி சூர்யா சிவா பேட்டி

அரசியல் ரீதியான பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்து சுவாமி நித்தியானந்தா வெளியேறுவார்- திருச்சி சூர்யா சிவா பேட்டி

நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் கைலாச விருதுகள் என்ற பெயரில் விஜயதசமி தினமான நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி சமூக வலைதளம் மூலம் ஆன்லைனில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு விருது வழங்கி உள்ளனர். அதில் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளருமான திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி கூறும் வகையில் வீடியோவை ஒன்றை தனது டிவிட்டர் பக்கதில் சூர்யா சிவா பதிவு செய்துள்ளார்.

இந் நிலையில் திருச்சியில் இன்று சூரியா சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...

இந்து மதத்தை பாதுகாக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை பாராட்டி நித்யாநந்தா தர்ம ரட்சகா என்கிற விருதை வழங்கி உள்ளார். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒருவர் விருது கொடுக்கும் போது அதை யாரும் மறுக்க கூடாது.

அவர் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. வட மாநிலங்களில் பல சாமியார்கள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவுக்கு உள்ள ஒரே சாமியார் நித்யானந்தா. அவர் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதிலிருந்து அவர் வெளியே வருவார். நித்யானந்தா பிரபலமானவர் என்பதால் பொய்யான புகார்கள் எழுவது சாதாரண விஷயம் தான். அவர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் தவறானது என்று கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO