ராஜராஜன் குறித்து வெற்றிமாறன் மற்றும் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கள் 100 சதவீதம் சரியானது - வீரமணி பேட்டி

ராஜராஜன் குறித்து வெற்றிமாறன் மற்றும் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கள் 100 சதவீதம் சரியானது - வீரமணி பேட்டி

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... முன் இருந்த காலத்தை விட தற்போது பெரியார் அதிகம் தேவைப்படுகிறார். தற்போது 

மதவாதமும், ஜாதிவாதமும் தலை தூக்கி ஆடுகிறது. அனைவருக்கும் கல்வி என்பதை கிடைக்கச்செய்ய மறுக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில், வேத பாட சாலையில் படித்தவர்கள் பள்ளிப்படிப்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்ததற்கு சமம் என பா.ஜ.க அரசு கூறுகிறது. நேரடியாக அவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரலாம் எனவும் கூறுகிறார்கள். இது பிற்போக்கு தனமான கண்டிக்கதக்க நடவடிக்கை.

கடந்த காலங்களில் கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக பாஜக வினர் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது தான் கல்வியின் தரம் தாழ்கிறது. இது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடந்துவருகிறது. இதனை குறை சொல்பவர்களிடம் இருந்து திமுக அரசை பாதுகாக்க வேண்டியது திராவிட இயக்கங்களின், குறிப்பாக திராவிடர் கழகத்தின் கடமையாக உள்ளது.

குழந்தை திருமணம் என்பது கிரிமினல் குற்றம். ஆனால் சிதம்பர தீட்சதர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல் குழந்தை திருமணம் செய்து வந்தார்கள். இதை ஏற்கனவே இருந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை. தற்போது குழந்தை திருமணம் தொடர்பாக தீட்சதர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். இதை பாராட்டும் அதே நேரத்தில், இந்த நடவடிக்கை கண் துடைப்பு நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாமியார்கள் தேடப்பட்ட அல்லது தேடப்படும் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள்.

இராஜ இராஜ சோழர் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது. அவர்களின் கருத்தை வைத்து வெறித்தனத்தை பரப்பலாம் என சிலர் முயற்சித்தால் அந்த பருப்பு இங்கு வேகாது. வேதங்களில் கூட இந்து என்கிற பெயர் கிடையாது. வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து. அந்த மதத்திற்கு இந்து என்கிற பெயர் இல்லை என்பதை நீதிமன்ற தீர்ப்புகள் கூறியுள்ளன. தேர்தல் ஆணையம் யாருடைய கைப்பாவையாக உள்ளது என்பது இந்திய மக்களுக்கு தெரியும். அது குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அந்த ஆணையங்கள் பல் இல்லாத ஆணையங்களாகவே உள்ளன என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO