திருச்சியில் ஸ்வஸ்திக் கிணறு என்று அழைக்கப்படும் மாற்பிடுகுப்பெருங்கிணறு

திருச்சியில் ஸ்வஸ்திக் கிணறு என்று அழைக்கப்படும் மாற்பிடுகுப்பெருங்கிணறு

திருச்சியில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் திருவெள்ளறை கோவில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த திருக்கோவிலில் கடவுளின் பெயர் புண்டரீகாட்ஷப் பெருமாள், அவரது பெயர் தமிழில் செந்தாமரைக் கண்ணன் என அற்புதமான தமிழால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கென்று தனி வரலாறு இருக்கிறது. ஆனால் இந்த கட்டுரையில் நாம் காணப்போவது கோவிலைப் பற்றியல்ல.

நம்மில் பலருக்கு தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் கோவிலின் பின்புறம் உள்ள ஸ்வஸ்திக் கிணறு என்று அழைக்கப்படும் மாற்பிடுகுப்பெருங்கிணறு பற்றித்தான் இக்கட்டுரை. இந்தக் கிணறு தெய்வீக வடிவமாகக் கருதப்படும் ஸ்வஸ்திக் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. தந்திவர்ம பல்லவன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் கி. பி. 800ஆம் ஆண்டில் கம்பன் அரையன் என்பவரால் வெட்டப்பட்ட கிணறு ஆகும். தந்திவர்மனின் பெயரல் மாற்பிடுகுப் பெருங்கிணறு என்று அழைக்கப்படுகிறது.

இதன் ஸ்வஸ்திக் வடிவம் பார்ப்பதற்கு மட்டும் அழகல்ல, நீர் ஆதாரத்தையும் காப்பதற்காக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாள் கோவிலில் இருந்து வெளிவந்து சாலைகளின் பிரகாரம் வழியாக வரும்போது கோவிலின் பின்புறமாக அமைந்திருக்கிறது இந்த கிணறு தமிழ்நாடு தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நான்கு படித்துறைகள் இருந்தபோதும் ஒரு படித்துறையில் இருந்து இன்னொரு படித்துறையை காண முடியாத அளவுக்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பேச்சு வழக்கில், மாமியார் மருமகள் பார்த்துக் கொள்ளாமல் குளிக்கவும் துணி துவைத்துக் கொள்ளவும் முடியும் என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.

நம் மண்ணின் நீர் ஆதாரத்துக்கு நம்ம முன்னோர்கள் செய்த ஒரு மிகப்பெரிய பணியாக இந்தக் கிணறு சான்றளிக்கிறது. இங்கு கல்வெட்டுகள் வரலாற்று பூர்வமாக அங்கே உள்ளது. இந்த இடத்தின் வரலாற்றுத் தகவலை தமிழ்நாடு தொல்லியல்துறை ஒரு பலகையாக வைத்திருக்கிறது.

அந்த கிணற்றுக்குள் இறங்கும்பொழுது அந்த படிக்கட்டில் இருந்து நாம் பேசினால் எதிரொலி நமக்கு கேட்கும். அந்த எதிரொலி கேட்பதற்கு சிலருக்கு பிடிக்கும். பேசியும் சத்தமிட்டும் எதிரொலியை கேட்டு ரசிக்கலாம். படித்துறையில் இறங்கும்பொழுது இறங்கியும் மேலிருந்தும் மற்றும் கீழே தரையில் இருந்தும் பல்வேறு வகையாக ரசிக்கலாம். தண்ணீர் இல்லாமல் அழகாக பராமரிக்கப்படுகிறது. இந்த இடத்தைப் பார்த்து ரசித்து பிள்ளைகளுக்கும் நாம் காட்டலாம். இப்படி ஒரு அற்புதமான கட்டிடக்கலையை நாம் தெரிந்திருந்தும் பார்க்காமல் இருப்போம். ஏற்கனவே ஒரு முறை பார்த்திருந்தாலும் இந்த கட்டுரைக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இவ்விடத்தைப் பார்க்க ஆவலாக

இருந்தால், நிச்சயமாக காணத்தவறாதீர்கள். திருவெள்ளறை செல்லும் நபர்கள் மறக்காமல் மாற்பிடுப்பெருங்கிணறையும் பார்த்து விட்டு வாருங்கள். நம் மண்ணின் வரலாற்றையும் நம் திருச்சியின் சுற்றுலாத் தளத்தையும் கண்டு மகிழ்வோம்.

தொகுப்பாளர் - தமிழூர். கபிலன்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision