திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இ-ரிக்சா சேவை தொடக்கம்!!
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் 800 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இங்கு கிட்டத்தட்ட 27 விடுதிகள் உள்ள நிலையில் அங்கிருந்து மாணவர்கள் தங்களுடைய வகுப்பறைகளுக்கு வருவதற்கு ஆட்டோ,சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தனர். ஆட்டோ கட்டணம் 50 ரூபாய்க்கு மேல் இருப்பதால் மாணவர்கள் சிரமப்படுவதை அடுத்து, பெங்களூரில் உள்ள டிரான்ஸ் வேகன் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து 3 இ- ரிக்சா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாணவர்கள், பேராசிரியர்கள் என்ஐடி வளாகத்திற்கு வருபவர்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பத்து ரூபாய் கட்டணத்தில் கல்லூரியில் செல்ல விரும்பும் இடத்திற்கு செல்லலாம்.காசில்லா பண பரிவர்த்தனை PAY TM முறையும் இதில் உள்ளது கூடுதல் சிறப்பு.
இவ்வாகனத்தில் நான்கு பேர் பயணிக்கலாம்.ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த இ- ரிக்சா சேவை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் மோசஸ்.
சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காத இ ஆட்டோக்கள் தேவை இருந்தால் கூடுதலாக கல்லூரிக்கும் வாங்கப்படும் என்றும், மாணவர்களிடம் இந்த இ-ரிக்சாக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறார் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் மினி சாஜிதாமஸ்.
இ- ரிக்சா இயற்கையோடு இணைந்த ஒன்றாக இருக்கும்பொழுது சுற்றுச்சூழல் மாசு என்பது நிச்சயம் குறையும்.