திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய செயலி!

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய செயலி!

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் இல்லத்தரசிகள் வேலைவாய்ப்பு, கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.

சுய உதவி குழுக்களின் மூலம் கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழலில், மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்கள் தயாரிக்கும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான செயலியை தேசிய தொழில்நுட்ப மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களை இணைய வழியில் விற்பனை செய்வதற்கான “திருமதி கார்ட்” எனும் செயலியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு , தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் மினி சாஜி தாமஸ் இன்று தொடங்கி வைத்தனர்.

Advertisement

மேலும் இச்செயலியின் பயன்பாடு குறித்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 நாட்கள் பயிற்சி திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற உள்ளது.தற்போது திருச்சி மகளிர் சுய உதவி குழுவின் பயன்பாட்டிற்காக தொடங்க பட்டுள்ள இச்செயலி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதில் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனையில் நாம் பயன்படுத்திய வேப்பங்குச்சி, கயித்து கட்டில் உள்ளிட்டவை பல ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு மாணவர்கள் எடுத்துள்ள செயலி முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.இச்செயலின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யலாம் என்றும், இதற்கான செயலி “திருமதி கார்ட்” என்று வடிவமைத்து உள்ளதாகவும், மகளிர் சுய உதவி குழுக்களின் பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் தரமாக உள்ளதாகவும், இன்றைய சூழலில் ஆன்லைன் விற்பனை முக்கியத்துவம் பெற்றதால் இந்த செயலி அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறார் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் மினி சாஜிதாமஸ்.

இதில் பேசிய திருச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் திருச்சி மாவட்ட மகளிர் திட்டக் குழுவின் மூலம் திருச்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இச்செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருள்கள் அனைத்தும் இச்செயலின் மூலம் விரைவில் விற்பனைக்கு வரும் என்றார்.

திருமதி கார்ட் எனும் செயலியின் மூலம் பெண்கள் மட்டுமல்லாமல், திருநங்கைகளும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யலாம் என்றும், விற்க விரும்புபவர்கள் செல்லர்ஸ் என்ற செயலி மூலமும், வாங்க விரும்புபவர்கள் பையர்ஸ் என்ற செயலின் மூலமும், பொருட்களை டெலிவரி செய்ய விரும்புபவர்கள் லாஜிஸ்டிக் செயலி மூலமும் பயன்படுத்திபயன் பெறலாம்.இத்தகைய செயலி என்பது மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமையும்.