வருடத்திற்கு 15 லட்சம் பயணிகளை கையாளுவதால் தரம் உயர்த்தப்பட்ட திருச்சி விமான நிலையம்!!
இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களுக்கு, அவை கையாளும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தர நிலை (கிரேடு) அளிக்கப்படுகிறது. முதல் நிலைக்கு நிர்வாக இயக்குநர், இரண்டாம் நிலைக்கு பொது மேலாளர், மூன்றாம் நிலைக்கு இணை பொது மேலாளர், நான்காம் நிலைக்கு முதுநிலை மேலாளர் அல்லது உதவி பொது மேலாளர் தகுதியுடையவர்கள் விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்படுவர்.
இந்நிலையில் மூன்றாம் தர நிலையில் இருந்த திருச்சி விமானநிலையத்தின் மூலம் கடந்த 2019-20 ஆண்டில் 8,895 சர்வதேச விமான சேவைகளும், 5,519 உள்நாட்டு விமான சேவைகளும், 69 பிற காரணங்களுக்கான விமான சேவைகளும் என மொத்தம் 14,483 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக 13 லட்சத்து 14 ஆயிரத்து 839 சர்வதேச பயணிகள், 2 லட்சத்து 97 ஆயிரத்து 020 உள்நாட்டு பயணிகள் என 16 லட்சத்து 11 ஆயிரத்து 859 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.ஓரே ஆண்டில் இங்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தை மூன்றாம் நிலையிலிருந்து, இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தி இந்திய விமானநிலைய ஆணையக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விமானநிலைய இயக்குநர் குணசேகரனிடம் கேட்டபோது, ‘தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் விமானநிலைய நிர்வாக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்’ என்றார்.
திருச்சி தொகுதி எம்.பி.யும், விமானநிலைய மேம்பாட்டு ஆலோசனைக்குழு தலைவருமான சு.திருநாவுக்கரசர் கூறும்போது, ‘நாட்டில் வேகமாக வளரக்கூடிய விமான நிலையம் என்பதாலும், ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகளுக்கு மேல் கையாண்டு வருவதாலும் இதனை தரம் உயர்த்த வேண்டும், ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர், விமானநிலைய ஆணையக்குழும அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்தினேன். ஏற்கெனவே இங்கு சுமார் ரூ.950 கோடி செலவில் புதிய முனையம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த தரம் உயர்வு திருச்சி விமானநிலைய வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக விளங்குகிறது. நிர்வாக ரீதியில் திட்டங்கள் குறித்து முடிவெடுப்பதிலும், நிதி ஒப்புதல் பெறுவதிலும் தாமதம் தவிர்க்கப்படும். புதிய வளர்ச்சி திட்டங்களையும், அதற்கான நிதியையும் எளிதில் கேட்டுப் பெற முடியும். இவற்றின்மூலம் திருச்சி விமானநிலையம் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
தற்போதைய அறிவிப்பில் இந்தியாவிலேயே திருச்சி மட்டுமே மூன்றாம் நிலையிலிருந்து 2-ம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 விமான நிலையங்கள் நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி விமானநிலையமும் அடங்கும். இதனுடன் கோரக்பூர் (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), ஜபல்பூர்(மத்திய பிரதேசம்), பிரயாக்ராஜ் (உத்தரபிரதேசம்) ஆகிய விமானநிலையங்களும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.