வேப்பிலை கட்டு பத்து ரூபாய்! கிருமிநாசினி என்பதால் விரும்பி வாங்கும் திருச்சி மக்கள்!
கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Advertisement
இந்நிலையில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதில் மக்கள் நாலாபக்கமும் மருந்து தேடி ஓடுகின்றனர். இந்த சூழலில் முன்னோர் காலம் தொட்டு கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டுவரும் மருத்துவ குணம் அதிகம் கொண்ட வேப்பிலைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Advertisement
குறிப்பாக நகர்ப்புறங்களில் வேப்பிலையின் தேவை அதிகரித்துள்ளது. தினமும் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கவும், கஷாயம் வைத்துக் குடிக்கவும், வீட்டின் முன் கட்டுவதற்காகவும் வேப்பிலையை வைத்துக்கொள்கின்றனர்.
இதனால் பலரும் எங்கு வேப்பிலை கிடைத்தாலும் எடுத்துச் செல்கின்றனர். மரங்களில் இருந்தால் கிளையோடு வெட்டியும் செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கீரைக் கட்டுகளை போன்று வேப்பிலையும் கட்டு ரூபாய் 10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி மார்க்கெட் பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் கடந்த சில நாட்களாக வேப்பிலையை கட்டு கட்டாக கட்டி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். மக்களும் கீரைகளுடன் சேர்த்து இந்த வேப்பிலையை கட்டுகளையும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கிராமப்புறங்களில் இருந்தால் அதிக அளவில் மரங்கள் இருப்பதால் மக்கள் அங்கிருந்து எடுத்துக் கொள்வார்கள் என்றும், நகர்ப்புறங்களில் அதன் தேவை அதிகரித்துள்ளதால் தினமும் வந்து மக்கள் வாங்கி செல்வதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a