வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடங்கியது
இந்திய சுதந்திரத்தின 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு வை தலைவராகவும், துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தியை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு தமிழகத்தில் விழாக்குழு அமைக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கெங்கு நடைபெற்றதோ அதை மீண்டும் நினைவு கூறுகிற வகையில் அந்தந்த இடங்களிலெல்லாம் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இக்குழு முடிவு செய்திருக்கிறது. கடந்த 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடத்தப்பட்டு உப்பு எடுக்கிற போராட்டம் நடைபெற்றது.
இதுவே இந்திய விடுதலையின் தொடக்கமாக இருந்தது. அதேபோல், அதே ஆண்டு 13.04.1930 அன்று தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தலைமையில் திருச்சியிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கிற சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மூதறிஞர் ராஜாஜி தலைமையில் அன்று நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை மீண்டும் நினைவுகூறுகிற வகையில், திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூணில் இருந்து, வேதாரண்யம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்கியது.
அதனை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர்,கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். போலீசாரின் பாதுகாப்போடு வேதாரண்யம் நோக்கி நினைவு பாதயாத்திரை தொடங்கியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO