நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சாலை வசதி - விரைவில் பணி தொடங்கும் என எதிர்பார்ப்பு!!
திருச்சி மக்களால் நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட அரை - வட்ட சாலை திட்டத்தை முடிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதிகாரப்பூர்வமாக இறுதி செய்துள்ளது. திருச்சி மாநகராட்சியின் வழியே இயங்கும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் துவாக்குடி - பஞ்சப்பூர் - மாத்தூர் - ஜீயபுரம் ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் உருவாக உள்ள இந்த திட்டம், பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் அமையவுள்ள நிலையில் மிக முக்கியமான, மாநகரின் நெரிசல் மிகுந்த சாலைகளான திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலை, திருச்சி - மதுரை நெடுஞ்சாலை மற்றும் திருச்சி - கரூர் நெடுஞ்சாலைகளை இணைக்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டு வழி சாலைகளாக உள்ள பஞ்சப்பூர் முதல் துவாக்குடி வரையிலான 25 கிலோமீட்டர் சாலையும், ஜீயபுரம் முதல் பஞ்சப்பூர் வரையிலான 19.9 கிலோமீட்டர் சாலையும் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட உள்ளது.
கிராமப்புற சாலைகள் அரைவட்டச் சாலையுடன் இணையும் இடத்தில் பாதுகாப்பான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து சிறிய மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இந்த சாலை வசதி மேம்படுத்தப்படும் பட்சத்தில், போக்குவரத்து நெரிசல்கள் குறைவதுடன், தென்தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் டெல்டா பகுதிகளை அணுகுவதும், சென்னை நெடுஞ்சாலையை அணுகுவதும் எளிதாகும்.
மேலும் 45 கிமீ நீளத்திற்கு தேவையான நிலம் ஏற்கனவே தயாராக இருப்பதாக NHAI கூறியுள்ள நிலையில் மேற்கொண்டு நிலங்கள் தேவைப்படுமா என்றும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தவிருக்கும் திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இறுதி செய்து 1616 கோடி ரூபாய் மதிப்பிற்கான கருத்துரை அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது, அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக டெண்டர் கோரி பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision