அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களை செய்வதற்கு பதிவு செய்ய வேண்டும் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
தமிழக காவல்துறை இயக்குநர், 23.09.2021-ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் 25.09.201-ஆம் தேதி இரவு 10.00 மணி வரை ரவுடிகளை பிடிப்பதற்கான தீவிரவேட்டை (ஆப்ரேசன் டிஸ்ஆர்ம்) நடத்த அறிவுறுத்தியதில், திருச்சி மாவட்டத்தில் 378 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டனர். 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 அருவாள், 1 கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாவட்டங்களில் ரவுடிகளுக்கு அபாயகரமான ஆயுதங்களை செய்து தருவது, வாங்கித் தருவது உள்ளிட்ட செயல்களைச் செய்பவர்களைக் கண்டறியும் நோக்கில், மாவட்டத்தில் அருவாள், கத்தி முதலிய ஆயுதங்களைச் செய்யும் பட்டறைகள் கணக்கிடப்பட்டன. அதன்படி ஜீயபுரம் உட்கோட்ட காவல்நிலைய பகுதியில் 14 பட்டறைகளும், லால்குடி உட்கோட்ட காவல்நலைய பகுதியில் 7-ம், முசிறி உட்கோட்ட காவல்நிலைய பகுதியில் 6-ம்,
மணப்பாறை உட்கோட்ட காவல்நிலைய பகுதியில் 13-ம் உள்ளதாகத் தெரியவருகிறது.
இப்பட்டறைகளை நடத்தி வருபவர்களிடம், இனி வரும் காலங்களில் எவரேனும்
அருவாள், கத்தி முதலிய ஆயுதங்களை செய்வதற்கு கோரினாலோ அல்லது புதுப்பிக்க கோரினாலோ, அவர்களின் விவரங்களைக் காவல் துறையினர் தந்துள்ள படிவத்தின் படி ஒரு
பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாரம் ஒருமுறை அப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையப் போலீசாருக்கு கிடைக்கச் செய்யுமாறும்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனைப் பெறும் போலீசார், ஆயுதம் வாங்கி சென்ற நபரை பற்றி முழு விசாரணை மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுபவராக அவர் இருப்பின் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.மூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn