சமயபுரம் கோவில் ராஜகோபுர குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சமயபுரம் கோவில் ராஜகோபுர குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தமிழ்நாட்டில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும் ராஜகோபுரம் அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

கோவிலின் முன் பகுதியான கிழக்குப் பக்கத்தில் 101 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக ரூபாய் இரண்டரை கோடியில்(2.5 கோடியில்) நிதி ஒதுக்கப்பட்டு முன்னதாக 27 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது.

மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்தநிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் கால தாமதமாகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டு வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 101 அடி உயரத்தில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று முடிவடைந்தது. இந்த ராஜகோபுரத்தில் மொத்தம் 324 சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. 

அம்மனின் பல்வேறு அவதாரங்கள், தைப்பூசம் தினத்தன்று மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் சீர் கொடுக்கும் கண்கொள்ளா காட்சி, சித்திரை தேர் திருவிழாவின்போது திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அபிஷேகம் மற்றும் நெய்வேத்திய பொருட்கள் வழங்கப்படும் நிகழ்வு, அம்மன் பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் அரிய சிற்பம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் அம்மனுக்கு நடைபெறும் வைபவங்கள் குறித்த சிற்பங்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பு. 

குழந்தை வரம் வேண்டி குழந்தைபேறு கிடைத்ததும் அம்மனுக்கு தம்பதியினர் தொட்டில் கட்டி நேர்த்திகடனை செலுத்தும் காட்சி. பக்தர்கள் விரதம் இருந்து அலகுகுத்தி அக்னி சட்டி ஏந்தி நடந்து வரும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7 நிலைகளுடன் கட்டப்பட்ட ராஜகோபுரத்தில் 60 கிலோ எடை கொண்ட 7 செம்பு கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராஜகோபுரம் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. இன்று நான்காம் கால பூஜை அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம் நடைபெற்று வருகிறது.அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் காலை 7.05 மணிய ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..  https://t.co/nepIqeLanO