90 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தில் புதிய சத்திரம் பேருந்து நிலையம்

90 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தில் புதிய சத்திரம் பேருந்து நிலையம்

1979ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையம் போதிய நடைபாதை வசதியில்லாமல், மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன், 15 பேருந்துகளை மட்டுமே நிறுத்தும் வகையில் இருந்தது. மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட சத்திரம் பேருந்து நிலையமானது 2.95 ஏக்கரில் உள்ளது. நாளொன்றுக்கு 285 பேருந்துகள் 4 நடையாக மொத்தம் 1,140 நடைகள் வந்து செல்கின்றன. மேலும் பயணிகள் ஓய்வறை, பொருள்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லை.

எனவே பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளுடன், பேருந்துகள் சிரமமின்றி எளிதில் வந்து செல்லவும், நெரிசலைக் குறைக்கும் வகையில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் இந்தப் பேருந்து நிலையத்தை ரூபாய் 17.34 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த புதிய பேருந்து நிலையத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வகையில் இரு தளங்களாக கட்டப்படுகிறன. தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 11 கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பறை, ஓய்வறை, கழிப்பிடம், பேருந்துகள் செல்லும் இடம் குறித்த அறிவிப்பு பலகை, குடிநீா், மின் விளக்கு போன்ற வசதிகள் உள்ளன. தரைத்தளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் கட்டப்படுகிறது. முதல் தளத்தில் 17 கடைகள், 5 உணவகங்கள், காவல் உதவி மையம், கழிப்பிடம் அமைகிறது. 

கடந்தாண்டு கொரோனாவால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னா் அளிக்கப்பட்ட தளா்வுகளைத் தொடா்ந்து பணிகளை மாநகராட்சி மீண்டும் விரைவுபடுத்தியது. மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், மாநகராட்சிப் பொறியாளா் உள்ளிட்டோா் அவ்வப்போது பணிகளை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் தற்போது, பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதில் கான்கிரீட் மேல்தளப் பூச்சு முடிந்துள்ளது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. இதரப் பணிகளையும் முடிந்து பேருந்துநிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF