மாநிலத்தில் முதன்முறையாக திருச்சியில் “காலை உணவு வங்கி” தொடக்கம்

மாநிலத்தில் முதன்முறையாக திருச்சியில் “காலை உணவு வங்கி” தொடக்கம்

திருச்சி மாவட்டம், தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இன்று (22.06.2022) காலை உணவு வங்கி என்னும் முன்னோடி திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக  திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. 2007 முதல் திருச்சி மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம் நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மக்கள் பங்களிப்போடு நடைபெற்று வருகிறது. 2018 ஆண்டு முதல் இப்பள்ளியில் 150 மாணவர்களுக்கு தினந்தோறும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவாக இட்டலி சாம்பார், இடியாப்பம், வெண்பொங்கல் சட்னி, சர்க்கரை பொங்கல், உப்புமா, சப்பாத்தி குருமா, தயிர் சாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.  

பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும், மற்றும் தேவையான உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக மக்கள் பங்களிப்போடு காலை உணவு வங்கி (breakfast bank) என்னும் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், திருமண நிச்சயதார்த்த நாள், பெற்றோர் நினைவு நாள், பணியில் சேர்ந்த நாள், பணி ஓய்வு பெற்ற நாள், புதுமனை புகு நாள், வீட்டு மனை வாங்கிய நாள், 60 வயது, 80வயது பிறந்த நாள் போன்ற முக்கிய நாள்களுக்கு மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்க வேண்டிய மளிகைபொருள்களான அரிசி, துவரம்பருப்பு, பாசிபருப்பு, கோதுமை ரவை, வெல்லம், கடுகு, சீரகம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் மற்றும் காய்கறிகள்  உள்ளிட்டவற்றை இணைந்து வழங்கினார்கள்.

இத்திட்டத்தை வடிவமைத்த சிவக்குமார், ஓய்வு பெற்ற முதல்வர், மாவட்ட ஆசிரியர்கல்வி பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் கூறியதாவது.... பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்கு பெருமளவில் உதவி வருகிறார்கள். தங்கள் வீட்டு விஷேச நாளில் உணவளிக்க வேண்டும் என்ற சூழலில் ஒருவர் மட்டுமே இதற்கு முன்பு பங்கேற்க வாய்ப்பாக இருந்தது.  

தற்போது பலரும் பங்குபெறும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த காலை உணவு வங்கி என்ற திட்டத்தில் பொதுமக்கள் காலை உணவிற்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள், ரவை, கோதுமை ரவை, சேமியா, வெல்லம், முந்திரி, திராட்சை, மிளகாய், புளி, மிளகு , நெய், எண்ணெய் மற்றும் காய்கறிகளை வழங்கிட இயலும். அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அவை தினந்தோறும் மாணவர்கள் விரும்பும் உணவு பள்ளியிலேயே சமைத்து வழங்கப்படும்.  பள்ளியிலேயே காலை உணவுத்திட்டத்தை வலுபடுத்த இத்திட்டம் உதவுகிறது. இதனால் பல நபர்கள் ஒரே நாளில் காலை உணவு திட்டத்திற்கு உதவி செய்து ஏழ்மைக் குழந்தைகள் நன்கு படிப்பதற்கு உதவிட முடியும்.  

இத்திட்டத்தை செயல்படுத்தும் பள்ளி தலைமையாசிரியர் கே.எஸ். ஜீவானந்தன் கூறியதாவது, பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்று விடுவதாலும், ஏழ்மை நிலையில் இருப்பதாலும் காலை உணவுத்திட்டம் பள்ளியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதில்லை. காலையில் மாணவர்கள் கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளில் தங்களை சோர்வில்லாமல் முழுமையாக ஈடுபடுத்தி கொள்கின்றனர். ஏற்கெனவே 12.02.2020 முதல் பள்ளியில் அட்சயபாத்திரம் எனும் காய்கறிகள் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது துவங்கப்பட்டுள்ள காலை உணவு வங்கியில் பெறப்படும் மளிகைப்பொருள்கள் இத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும்.  பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் மனமுவந்து பள்ளிக்கு பொருட்களை வழங்கலாம்.

மேலும் தமிழக அரசு,  பள்ளிகளில் செயல்படுத்த உள்ள காலை உணவுத்திட்டத்தில் பள்ளி வாரியாகவோ, மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்திலோ காலை உணவு வங்கியை துவக்கும் போது அங்கு உணவுப்பொருட்கள் சேகரிப்பட்டு, அத்திட்டம் மேலும் வலிமை பெறும். அரசுக்கு செலவினம் குறையவும் வாய்ப்புள்ளது. மக்கள்/தனியார் அரசுடன் பங்கு பெறுவதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்  எனக் கூறினார்.  
இக்காலை உணவு வங்கி திட்டம் பற்றி பெற்றோர்கள் கூறுகையில், எங்கள் குழந்தைகள் பள்ளியில் வழங்கப்படும் தரமான காலை உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். குடும்பச்செலவு குறைகிறது.  குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று விடுகிறார்கள். பள்ளிக்கும் விடுமுறை எடுப்பதில்லை.  

இத்திட்டத்தை இன்று (22/06/2022) சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட  என்.வி.வி. முரளி, புரவலர், அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் காலை உணவு வங்கியை தொடங்கி வைத்து காலை உணவுத்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 2018ல் இருந்து இப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தபடுகிறது.  மேலும் மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் படிக்க முடியும். இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு வங்கி, காலை உணவுத்திட்டத்தில் புதிய மைல்கல் ஆகும். பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.

பேராசிரியர் மற்றும் இயக்குநர் முனைவர்  மணிமேகலை, மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி அவர்கள் குத்து விளக்கேற்றி சிறப்பித்து கூறியதாவது, குழந்தைகள் ஊட்டச்சத்து அதிகரிக்கும். இடைநிற்றல் குறையும், பள்ளி சேர்க்கை அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். பெற்றோர் குடும்பச்செலவு குறையும். சமூக பொறுப்புள்ள ஒவ்வொருவரும் இத்திட்டத்தில் ஈடுபட்டு வலிமைச்சேர்க்க வேண்டும்.

தேசிய கல்லூரி மற்றும் இப்பள்ளியின் செயலருமான வழக்கறிஞர் ரகுநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர்  ஜோசப் அந்தோணி, மேனாள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயராமன், குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர் கண்ணம்மாள், ஷைன் திருச்சி அமைப்பு  நிறுவனர் மனோஜ் தர்மர், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். யோகா பயிற்றுனர்  காயத்திரி உட்பட திரளான பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஆசிரியை என். உமா நன்றி கூறினார். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக 150 பேருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி, தலைமையாசிரியர் ஜீவானந்தன் செய்திருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO