திருச்சியில் கொரோனா தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு
திருச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதி அளவு குறைந்துள்ளது. திருச்சியில் ஜூன் ஒன்றாம் தேதி 11,013 பேர் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 4,683 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது ஜூன் மாத தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.
ஒரே நாளில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதியன்று 987 ஆக பதிவானது ஆனால் ஜூன் 15 நிலவரப்படி ஒரு நாளைக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 360 ஆக குறைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மே 26 அன்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 1775 என்ற எண்ணிக்கையை எட்டியது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நோய்த்தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது என்று சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாண்டி ஊரக பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகின்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறுகையில்.. நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் இரண்டு பகுதிகளையும் சரியாக கண்காணித்து வருகிறோம். அதுமட்டுமின்றி காய்ச்சல் முகாம்கள், வீடுகளுக்கே சென்று அவர்களுடைய உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜனின் அளவு போன்றவற்றை ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.
முழு ஊரடங்கு நோய்த்தொற்று எண்ணிக்கையை குறைப்பதற்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. திருவரம்பூர், துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அதேபோல் இறப்பவர்களின் எண்ணிக்கை பொறுத்தவரை செவ்வாய்க்கிழமை அன்று 14 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
ஒரு சில கடைகள் மற்றும் பல நிறுவனங்கள் தளர்வுகள் உடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவை இல்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்த்தல் மிக அவசியமானது. தொற்று எண்ணிக்கை இன்னும் குறைவது பொது மக்களின் கையிலேயே உள்ளது என்கின்றனர் சுகாதார துறை மூத்த அலுவலர்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve