திருச்சி அருகே தேர் செல்லும் பாதை தகராறு - அம்மன் சிலையை தூக்கி வந்த போலீசார்

திருச்சி அருகே தேர்  செல்லும் பாதை தகராறு - அம்மன் சிலையை தூக்கி வந்த போலீசார்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உன்னியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் தேரினை எடுத்து செல்ல முறையான பாதையினை மீட்டு தர கோரி இரண்டு கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உன்னியூரில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் தேர் திருவிழாவினை உன்னியூர், சுள்ளி பாளையம்,நாகப்ப முதலிபுதூர், மூங்கில் பட்டி ஆகிய கிராமம் மக்கள் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடி வந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர் திருவிழாவானது நிகழாண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி ஆகஸ்ட் 8 ம் தேதி திருத்தேர் தலையலங்காரம் நடத்தி திருத்தேர் திருவீதிவுலா நடைபெற்று வந்தது.

இதில் திருத்தேர் சுள்ளிப்பாளையம் மற்றும் உன்னியூர் பகுதி நகர்வலம் சென்றதை தொடர்ந்து தேரினை நாகப்ப முதலிபுதூர் மற்றும் மூங்கில்பட்டி பகுதிக்கு எடுத்து செல்வதற்காக முறையான பாதை கேட்டு நாகப்பமுதலிபுதூர் மற்றும் மூங்கில்பட்டி பகுதி மக்கள் காட்டுப்புத்தூர் வேலூர் செல்லும் சாலையில் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பால்வண்ணநாதன், முசிறி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், தொட்டியம் வட்டாட்சியர் சத்திய நாராயணன் மற்றும் காவல் துறையினர் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நீதிமன்ற உத்தரவுபடி நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பின்னர் நாகப்பமுதலிபுதூர் மற்றும் மூங்கில்பட்டி பகுதிக்கு தேரினை எடுத்து செல்லாமல் திருத்தேரினை திருப்பி கோவிலுக்கு கொண்டு சொல்வதாக கூறி திடீரென தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வேலி தடுப்பினை அகற்றி தேரை தங்கள் பகுதிக்கு எடுத்து செல்ல முயற்சித்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது, இந்த வாக்குவாதத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதால் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி கோவில் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறைனர் தேரில் இருந்த அம்மன் சிலையை மீட்டு கோவிலுக்கு கொண்டு சென்று வைத்தனர்.சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO