குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை - மாநகர காவல் ஆணையர் பேட்டி

குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை - மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கின்ற சகோதரர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நகை திருட்டு வழக்கில் சம்பந்தமாக சோமசுந்தரம் மற்றும் துரைசாமியிடம் விசாரணை நடத்த உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் இரு காவலர்கள் ரவுடிகளை காவல் வாகனத்தில் அழைத்து வந்தனர். இதில் அவர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த அருவாள் மற்றும் கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள குழுமாயி அம்மன் ஆற்றங்கரையோரம் நகைகளை மறைத்து வைத்துள்ளதாக இருவரும் தெரிவித்துள்ள நிலையில், அந்த இடத்தில் சோதனை நடத்துவதற்காக போலீசார் அவர்களை அழைத்து வந்தனர். அப்போது காவல் வாகனத்தை விபத்து ஏற்படுத்தி அதில் இருந்த கத்தி மற்றும் அருவாளை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பி ஓடியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இவர்களை பிடிக்க முயன்ற போது ரவுடிகள் இருவரும் போலீசாரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இவர்களிலிருந்து தப்பிக்க காவல் ஆய்வாளர் வைத்திருந்தால் துப்பாக்கியால் ரவுடிகளின் காலில் சுட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்..... சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்காகவோ, கைது செய்தோ குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்லும் பொழுது போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. குற்றவாளிகள் திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில் அதனை மீட்பதற்காக வந்த பொழுது குற்றவாளிகள் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn