தொட்டியம் ஒன்றிய குழு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் - திமுக கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு

தொட்டியம் ஒன்றிய குழு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் - திமுக கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பத்தினாலும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திமுக பெண் ஒன்றிய கவுன்சிலரை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த சம்பவத்தாலும் பரபரப்பு ஏற்பட்டது.

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றிய கவுன்சிலர் களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் புனிதாராணி தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை தலைவர் சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டம்  துவங்கியவுடன் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சத்தியமூர்த்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரைதளத்தில் இருந்த கூட்டம் மன்றத்தை எதற்காக முதல் தளத்திற்கு மாற்றினீர்கள் யாரை கேட்டு எந்த அதிகாரத்தால் இதுபோன்று செய்தீர்கள் என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். 

மேலும் கூட்டமன்றத்தில் ஒன்றியக்குழு தலைவர் க்கு அருகாமையில் இருந்த தனது இருக்கையை பக்கவாட்டில் அமைத்தது யார் என கேள்வி எழுப்பினார். அப்போது அலுவலக ஊழியர் டேபிள் மீது வைத்த இனிப்பு காரத்தை கோபத்துடன் தட்டிவிட்டார். இனிப்பு கார வகைகள் பக்கவாட்டில் நின்றிருந்த செய்தியாளர்கள் மீது சென்று விழுந்தது. 

அதனை தொடர்ந்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜன் முதல் தளத்திற்கு கூட்டம் மன்றத்தை மாற்றியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது நாகையநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் தீபா கூட்ட மன்றம் எங்கிருந்தால் என்ன இதில் என்ன பிரச்சனை என கேட்டதற்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் சத்தியமூர்த்தி உள்பட திமுக அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் 11 பேர் கூட்ட மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் கூட்டம் மன்றத்திற்குள் மீண்டும் வந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ் அதிமுக  கவுன்சிலர் தீபாவிடம் நான் கேள்வி எழுப்பியதற்கு நீ எப்படி பேசலாம் என ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார் இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கூட்ட மன்றத்தில் ஒன்றிய வரவு செலவு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. உள்ளே இருந்த ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்திப் பேசினர். ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய ஆணையர்கள் தெரிவித்தனர். கூட்டம் முடிந்த சற்று நேரத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த திமுக கிளைச் செயலாளர் முத்தையா என்பவரை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் என்பவர் தாக்கியதாக பரபரப்பு ஏற்பட்டது.

சற்று நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திமுக கிளைச் செயலாளர் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கூட்ட மன்றத்தில் வெளிநடப்பு கிளை செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட அடுத்தடுத்த நிகழ்வுகளால் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. தகவலறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி பொறுப்பு முத்தரசு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM