திருச்சியில் சாலை விரிவாக்கத்திற்கு பள்ளிவாசல் இடிப்பு - போலீசார் குவிப்பு - சாலை மறியல்!!

திருச்சியில் சாலை விரிவாக்கத்திற்கு பள்ளிவாசல் இடிப்பு  - போலீசார் குவிப்பு - சாலை மறியல்!!

திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபமாக மேம்பால பணிகள் முடிவடைந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேம்பாலத்தில் அனுகு சாலை பணிகள் நிறைவடையாமல் இருந்த நிலையில் இன்று சர்வீஸ் ரோடு விரிவாக்கத்திற்காக 9 மீட்டர் பள்ளிவாசல் நெடுஞ்சாலையின் ஆக்கிரமிப்பில் இருந்ததால் தற்போது 2.5 மீட்டர் வரை இடித்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Advertisement

கடந்த இரண்டு வருடங்களாக இதற்கு முறையாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இடிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று நெடுஞ்சாலைத்துறையினர் இன்று பள்ளிவாசலின் ஆக்கிரமிப்பை இடித்தனர்.

 

இதற்கு பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்கள் நீதிமன்ற தடை வாங்கி வைத்துள்ளோம் என்றும், இடிக்கக் கூடாது என்றும் தெரிவித்த நிலையில் ஆனால் திடீரென இடித்து விட்டார்கள் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை கண்டித்து தற்போது இஸ்லாமியர்கள் திருவானைக்காவல் மேம்பாலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .பெண்களும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக இடிக்கப்பட்ட பொழுது பள்ளிவாசலுக்குள் சிலர் உள்ளே அமர்ந்து வெளியே வர மாட்டோம் என போராட்டம் நடத்தியும் ஜேசிபி மீது பெரிய கல்லை தூக்கி போட்டு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார்‌ 1.30 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY