திருச்சி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சோகம்

திருச்சி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சோகம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (வயது 10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஜெகன்நாத் தனது நண்பர்களுடன் பர்மா காலனியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மீன் பிடித்து விளையாட சென்றுள்ளார்.

அப்போது அவரது காலணி ஒன்று கிணற்றில் விழுந்துள்ளது. அதை எடுக்கும் முயற்சியில் கிணற்றில் ஜெகநாத் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெகன்நாத் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட உடன் சென்ற நண்பர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கண்டோண்மென்ட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி இந்த கிணற்றை சுற்றி மூலிகை பூங்கா அமைத்து பராமரித்து வந்தது. நாளடைவில் போதுமான பராமரிப்பின்றி இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

மேலும் கிணற்றின் மேற்பரப்பில் வலை அமைக்கப்படாமல் இருப்பதால் விடுமுறை நாட்களில் இது போன்ற சிறுவர்கள் அங்கு விளையாடி மீன்பிடித்து வருவது தொடர்கதை ஆகி உள்ளது. இனி வரும் காலங்களில் பூங்காவை முறையாக பராமரிப்பு செய்து, கிணற்றின் மேற்பரப்பில் வலை அமைக்கப்பட்டு மாநகராட்சி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn