மாநகரில் 24 இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- நூதன தண்டனை

மாநகரில் 24 இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- நூதன தண்டனை

திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் இரு சக்கர வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமலும், தலைக்கவசம் அணியாமல் செல்வதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் புதிய ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் சத்ய பிரியா திருச்சி மாநகரில் விபத்தை குறைக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் முழுவதும் 24 இடங்களில் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் அதிரடியாக விழிப்புணர்வு வாகன சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக கல்லுக்குழி, நீதிமன்றம், தென்னூர், தில்லை நகர், உறையூர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் காவல் துணை ஆணையர்கள் தலைமையில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நடத்தி வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை பிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்தனர். மேலும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கரத்தில் வாகனத்தில் வந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பிடித்து அவர்களை தோப்புக்கரணம் போட செய்து நூதன தண்டனை கொடுத்தனர். இது மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்த போலீசார் தலைக்கவசம் எடுத்து  அணிய வைத்து உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்த இந்த நிலையில் தற்பொழுது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி கவலைப்படாத வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்த நிலையில், தற்பொழுது மாநகர காவல் ஆணையரின் இந்த நடவடிக்கையால் மாநகரில் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்வதை காண முடிந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn