திருச்சி மாவட்ட தொழில் மைய மேலாளர் அலுவலகம், வீடுகளில் 9 லட்சம் ரொக்கம், ஒரு கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோருக்கு கடன் வழங்க இந்த அலுவலகம் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
இந்நிலையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய பயனாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று மாலை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், பொறியாளர் கம்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமேலாளர் ரவீந்திரன் அறையில் 3 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த பணத்தையும், மேலும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத 6 லட்சம் பணம், 40 லட்சம் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தன ஆவணங்கள், 50 பவுன் நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திருவெறும்பூரில் உள்ள பொறியாளர் கம்பன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மேலாளர் ரவீந்திரன் வீட்டில் வங்கி லாக்கர் சாவிகள் 3 கைப்பற்றப்பட்டுள்ளன. அதை வங்கியில் சென்று திறந்து பார்த்த போது மொத்த மதிப்பு குறித்து தகவல் தெரிய வரும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO