திருச்சி திருநங்கை கொலை - இளைஞர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேல காவல்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற மணிமேகலை (30). திருநங்கையான இவர் கடந்த 15ம் தேதி இரவு நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் ஆறு முட்புதருக்குள் மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் விதுன்குமார் தலைமையில் 5 தனிப்படை போலீசார் மணிமேகலையை கொலை செய்த குற்றவாளியை தேடி வந்தனர்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கத்தியில் பதிவாகியிருந்த கை ரேகையை மூலதனமாக வைத்து தனிப்படை போலீசார் விசாரணை வலையை விரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவாரூர் மாவட்டம், கொடவாசல் தாலுகா, புதுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (25) என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்... திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கரூரில் தங்கி கொத்தனார் வேலை பார்த்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்டாகிராம் மூலம் மணிமேகலை பழக்கமாகியுள்ளார். தொடர்ந்து அவரை அவ்வப்போது நேரில் சந்தித்து இரண்டுபேரும் அன்பாக பழகி நாளடைவில் மணிமேகலை ரமேஷை காதலிப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில்தான் அவர் இன்ஸ்டாகிராமில் பலருடன் பழகியது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ், மணிமேகலை யிடம் கேட்டபோது அலட்சியமாக பேசியதுடன் கொடுத்த பணத்தை திருப்பி தர மறுத்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவரை கொலை செய்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டு அதன்படி சம்பவத்தன்று இரவு திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டிற்கு பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் மணிமேகலையை செல்போனில் தொடர்பு கொண்டு கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள முட்புதருக்குள் தனிமையில் சந்திக்க வரவழைத்து அவரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது அவர் கோபமாக பணத்தை திருப்பி தர இயலாது என கூறினார். ஆந்திரத்தின் உச்சிக்கு சென்ற ரமேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமேகலையின் கழுத்தில் குத்திக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானதாக ரமேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ரமேஷ் மீது கொள்ளிடம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision