ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதி

ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதி

உலகில் இத்தனை கோடி மக்கள் இருந்தும் ஒருவருக்கு யாரும் இல்லாத இவ்வுலக வாழ்க்கை மிகவும் கொடுமையான ஒன்று. அப்படி ஆதரவற்றவர்களாக வாழ்ந்து இறப்பவர்களுக்கு ஒரு உறவாக தங்களை பாவித்து அவர்களுடைய அண்ணன், தங்கை, அக்கா, அம்மா, அப்பா, நண்பன் இப்படி அத்தனை உறவுகள் ஆகவும் மாறி இறந்தவர்களின்  உடலை அடக்கம் செய்து வருகின்றனர் திருச்சியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் சித்ரா தம்பதி. 

இதுகுறித்து விஜயகுமார் அவர்களிடம் கேட்டறிந்த போது அவர் கூறுகையில்,
திருச்சி மாநகராட்சியில் புத்தூர் அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளையை நிர்வகித்து வருகின்றோம். யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் என்னுடைய மனைவி சித்ரா வழக்கறிஞராக உள்ளார். எந்த ஒரு உறவும் இல்லாமல் அனாதையாக இருப்பவர்களுக்கு அவர்களுடைய உறவாக எங்களை நினைத்துக் கொண்டு அவர்களுடைய இறுதி மரியாதையை செலுத்த வேண்டும் என்று எண்ணினோம். தன்னலமற்ற சேவையில் அனாதைப் பிணங்களை தம்பதி சகிதமாக அடக்கம் செய்வோம். 

சேவை என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை, பொருளாதாரமும் இருக்க வேண்டும். எங்களது ஊதியத்தில் ஒரு பங்கினை சேவைக்காகவே செலவிட்டு வருகிறோம். உலகில் பிறக்கும் பொழுது மகிழ்ச்சியும், இறக்கும் பொழுது துக்கமும் இருப்பது மனித சமூகத்துக்கே உரியது. ஆனால்  உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் இன்றி ஆதரவற்று சாலையோரம் இறப்பது மிகவும் கொடுமையானது. இறப்பவர்கள் தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரித்து அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் கொடுத்த பின்பு இறந்தவர்களின் உடல்களை பிரேத அமரர் அறையில் வைக்கப்பட்டு இருக்கும்.

ஆதரவற்றோர் என்றால் அமிர்தம் சமூக அறக்கட்டளை நடத்தி வரும் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள் சடலத்தை பெற்று காவலர்களுடன் சென்று முறைப்படி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நல்லடக்கம் செய்வோம். அனாதைப் பிணங்களாக நல்லடக்கம் செய்பவர்களில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று இறந்தவர்கள், விபத்தில் இறந்தவர்கள், மது அருந்தி இருந்தவர்கள் பலர் உண்டு. இதில் பிள்ளைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தப்பின் அப்படியே விட்டு சென்றவர்களும் உண்டு.

இவ்வாறு இருப்பவர்களின் உடலை அமரர் ஊர்தியில் கொண்டு சென்று நல்லடக்கம் செய்கின்றோம். அனாதை பிணங்கள்  குறித்த தகவல் வந்தவுடன் இடுகாட்டு பணியாளர்களுக்கு தகவல் அளிப்போம். அவர்கள் குழிதோண்டி வைத்திருப்பார்கள் அனாதைப் பிணங்கள் அடக்கம் செய்வதில் அரசு மருத்துவமனை மருத்துவர் சிகிச்சை மற்றும் இறந்த தகவல் சான்று காவல்துறையினர் விசாரணை முதல் தகவல் அறிக்கை பெற்ற தகவலின் அடிப்படையில் காவலர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்வோம்.

இறந்தவர் எந்த மதம், சாதி என்று தெரியாது அவருடைய குடும்ப உறுப்பினர் இருந்தால் என்னவெல்லாம் செய்வார்களோ அதை நாங்கள் செய்கின்றோம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்களை அழைத்து பிரார்த்தனை செய்து முறைப்படி அடக்கம் செய்கின்றோம். 50க்கும் மேலான அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ளோம்.

சேவை மனப்பான்மையில் பலரும் பல வகையில் உதவும் பொழுது இத்தகைய உதவியை அவர்களுக்கு செய்தோம் என்பதை தாண்டி இத்தனை உயிர்களுக்கு உறவுகளாக மாறியிருக்கிறோம் என்பதே எங்கள் வாழ்விற்கான அர்த்தம் என்கின்றனர் சித்ரா - விஜயகுமார் தம்பதிகள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve