திருச்சியில் வெயிலின் கோரத்தாண்டவம் - மயங்கி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

திருச்சியில் வெயிலின் கோரத்தாண்டவம் - மயங்கி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்து வருகிறது. திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. இயல்பை விட இந்த ஆண்டு அதிகமாக வெப்பம் நிலவி வருவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 4:00 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வாகனங்களை ஓட்டி வருகின்றனர். வெயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார். அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அதற்கு முன்னதாக கடந்த சில நாட்களாக கோடை வெயில் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த நிலையில் திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் சேர்ந்த ஜெயக்குமார் (48) எலக்ட்ரீஷியன் ஆக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் வருவது போல் இருந்ததால், அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்