சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் - பூச்செரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம்
சக்தி வாய்ந்த கோயில்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வந்து அம்மனிடம் வேண்டுபவை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பூச்செரிதல் விழா. ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்செரிதல் விழா நடப்பது வழக்கம்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28 நாள் விரதமிருப்பதாக ஐதீகம். இவ்விரதகாலத்தில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் இன்றி இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்செரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்செரிதல் விழா கோலாகலமாக துவங்கியது. கோவில்நிர்வாகத்தின் சார்பில் சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நிர்வாகத்தினர், கிராமமக்கள் உள்ளிட்டோர் யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்து கோயில் நான்கு மாட வீதியில் வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்து.
பின்னர் பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வரும் பூக்களைக்கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO