திருச்சி தேசிய கல்லூரியில் முப்பெரும் விழா கருத்தரங்கு
திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியும் தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து முப்பெரு விழா ஒருநாள் தேசியக் கருத்தரங்கினை 12.12.2002 அன்று நிகழ்த்தினர். பாரதியாரின் பிறந்த நாளையொட்டிய தேசிய மொழிகளின் தினத்தையும், இராமலிங்க வள்ளலாரின் 2010 ஆவது ஆண்டு ஜெயந்தியையும், இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த அமுதப் பெருவிழாவையும் சேர்த்து முப்பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி "இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு” என்னும் பொருண்மையில் ஒருநாள் தேசியக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசியக்கல்லூரியின் பத்மவிபூஷண் Dr.வி.கிருஷ்ணமூர்த்தி அரங்கத்தில் இக்கருத்தரங்கம் 9.30 மணிக்குத் திருவிளக்கு ஏற்றி, பாரததாய், பாரதியார், வள்ளலார் திருவருவப்படங்களுக்கு மலர் தூவித் தொழுது தொடங்கப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வந்தோரைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.குமார் வரவேற்றார். அப்பொழுது பாரத தேசத்திற்கும் சமூகத்திற்கும் தேசியக்கல்லூரி ஆற்றிய அரும்பணிகளை எடுத்துரைத்தார். தேசியக்கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் Dr. என்.எஸ் . பிரசாத் தம் தலைமையுரையில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் கல்வி நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவுபடுத்தினார்.
தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இரா. மாது, பாரதியாரின் ஒருமைப்பாட்டு உணர்வு, வள்ளலாரின் ஜீவகாருணிய சிந்தனை, தேசியக் கல்லூரியின் நாட்டுப்பற்று வரலாறு ஆகியவற்றைத் தம் நோக்கவுரையில் எடுத்துரைத்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் முனைவர் மாணிக்கவாசகம் தம் வாழ்த்துரையில் தேசியக்கல்லூரியின் பணிகளையும் தேசிய சிந்தனைக் கழகத்தின் 'காண்டீபம்' இணைய இதழின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.
இத்தொடக்க விழாவிற்குத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டா. அவர்தம் உரையில் விடுதலைப்போராட்ட வரலாற்றில் மொழி, இலக்கியங்கள் ஆற்றிய சீரிய பணிகளை எடுத்துரைத்தார். இன்று மக்களுக்குத் தேவையான வரலாற்று அறிவையும் வாழ்வியல் விழுமியங்களையும் இதுபோன்ற கருத்தரங்கங்களே தரவல்லன எனவும் கூறினார்.
தொடக்கவிழாவின் நிறைவாக இந்த முப்பெரு விழாவிற்கும் தேசியக்கல்லூரிந்துமான தொடர்பை, இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே செயின் ஜாஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய ஆர்யா (எ) பாஷ்யமும், வள்ளலார் புகழை உலகிற்குப் பரப்பிய ஊரன் அடிகளும் தேசியக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் என்றும், பாரதியாரைச் சுதேசமித்திரன் இதழில் பணியமர்த்தி, அவர் பார் போற்றும் புகழைப் பெறுவதற்குக் காரணமான பேரா ம.கோபாலகிருஷ்ணய்யர் இக்கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவர் என்றும், இன்றைய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் தம் நன்றியுரையில் கூறினார்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வின் காசர்கோடு கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என். அஜித்குமார், 'இந்திய வீடுதலைப் போராட்டத்தில் மலையாள மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு இரண்டின் கர்நாடகா அரசு முதல்நிலைக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அஜகலாகிரீஷ் பட், 'இந்திய வீடுதலைப் போராட்டத்தில் கன்னட மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு மூன்றில் ஆந்திராவின் இந்து கல்லூரிக் கமிட்டி, துணைத்தலைவர் முனைவர் சிங்கம் வெங்கட் லெட்சுமிநாராயணா, 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தெலுங்கு மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், நான்காம் அமர்வில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன், 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.
ஒவ்வொருவரும் விடுதலை வேள்வியில் தென்னிந்திய மொழிகளின் இலக்கிய ஆளுமைகள், நாட்டுப்பற்றையும் சுதந்திர உணர்ச்சியையும் தத்தம் படைப்புகளில் எவ்வாறு மிளிரச் செய்துள்ளனர் என்பதை விரிவாக எடுத்துரைத்தனர். இவ் அமர்வுகளுக்குக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணையேந்தர் முனைவர் என். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆய்வுகளின் மீதான தம் மதிப்புரையைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
பெருந்திரனாகப் பேராசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றஇந்நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் சா. நீலகண்டன், முனைவர் க.புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO